சொர்க்கம்னா என்ன தெரியுமா? இந்த கார்ல ஏறியதும் மேல பாருங்க தெரியும்!
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி இந்தியாவில் விண்ட்ஸர் என்ற எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட டீசரில் இந்த காரில் இடம்பெறப் போகும் சில முக்கியமான அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தன. தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சர்வதேச மார்க்கெட்டில் வூலிங் என்ற பிராண்டில் கிளவுட் என்ற எலெக்ட்ரிக் வாகனம் விற்பனையாகி வருகிறது. அந்த வாகனத்தை இந்தியாவிற்கு கொண்டுவர முடிவு செய்த எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விண்ட்ஸர் என்ற பெயரில் அந்தக் காரை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அந்த கார் விற்பனைக்கு வருகிறது. தற்போது இந்த காரின் புதிய டீசர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த காரில் பின்பக்க சீட் சாய்வு வசதியுடன் கூடிய சீட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஏரோ லாஞ்ச் சீட் என அந்நிறுவனம் பெயர் வைத்திருந்தது. இதுபோக இந்த வாகனத்தில் 15.6 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே,
முன்பக்க சீட்டுகள் பவர் அட்ஜஸ்டபிள் ஆப்ஷன், பவர்டு டெயில் கேட், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் சார்ஜிங், 6 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என தீவிரமாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த காரில் பாதுகாப்பு அம்சத்திற்காக நான்கு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், மற்றும் அடாஸ் தொழில்நுட்பம் ஆகியவையும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான டீசரில் இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் தற்போது மாஸ் மார்க்கெட்டில் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகம் ஆகும் விண்ட்ஸர் இவி காரில் சிங்கிள் மோட்டார் போன்ற டிரைவிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது முன்பக்க வீல் டிரைவ் சிஸ்டமாக வழங்கப்பட்டுள்ளது. இது 134 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 50.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 460 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது காரில் உள்ள பேட்டரியை 100% சார்ஜ் செய்ய ரெகுலரான ஏசி சார்ஜரில் 7 மணி நேரம் ஆகிறது. இதுவே டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 80 சதவீத சார்ஜை வெறும் 30 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது ஆங்காங்கே இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷனில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் போட்டு விரைவாக பயணம் செய்து கொள்ள முடியும்.
தற்போது இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பலரை சந்தோஷப்படுத்தி உள்ளது. இந்தியாவில் சன் ரூஃப் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மக்கள் பலர் சன் ரூஃப் பொருத்தப்பட்ட காரை அதிகம் வாங்க விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தயாரிப்புகளில் சன் ரூஃப் பொருத்தப்பட்ட வெர்ஷனை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.
ஆனால் இந்தியா போன்ற வெப்ப கால சூழ்நிலை கொண்ட நாட்டில் சன் ரூஃப் என்பது ஒரு தேவையில்லாத அம்சம் தான். மிகக் குறைவான நேரத்திலேயே இது பயன்படுத்தப்படுகிறது. மற்ற நேரமெல்லாம் இது மூடி இருக்கிறது. இதனால் காரின் விலை அதிகரிக்கிறது. அதனால் சன் ரூஃப் பெரிதாக பயன் படாவிட்டாலும் மக்களுக்கு அந்த சிறிது நேர சந்தோஷம் தேவை என்பதால் இதை விரும்புகிறார்கள்.
எம்ஜி நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தையில் காலடித்தடத்தை எடுத்துவைத்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே கோமெட் இவி என்ற காரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது தனது அடுத்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனத்தின் இந்த விண்ட்ஸர் இவி காரை மக்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இதில் மக்களுக்கு பிடித்தமான அம்சம் இடம் பெற்றிருப்பது இந்த காரின் விற்பனையை அதிகரிக்க வைப்பதற்கான வித்தியாசப்படுகிறது. இதனால் இந்த கார் விற்பனைக்கு வந்த பிறகு பலர் இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








