பேட்டரியுடன் வாங்கினாலும் இவ்ளோதான் விலையா!.. அதிக இட வசதி கொண்ட விண்ட்ஸர் இவி காரின் முழு விலையும் வெளியானது!
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், அதன் சமீபத்திய வெளியீடான விண்ட்ஸர் இவி (Windsor EV)-யின் முழு விலை விபரத்தையும் வெளியிட்டிருக்கின்றது. விண்ட்ஸர் இவி ஓர் அதிக இட வசதிக் கொண்ட சியூவி (CUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவின் முதல் சியூவி ரக கார் மாடல் இதுவே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை செப்டம்பர் 11 ஆம் தேதி அன்றே ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.
எக்சைடு (Excite), எக்ஸ்க்ளூசீவ் (Exclusive) மற்றும் எஸ்சென்ஸ் (Essence) ஆகியவையே அவை ஆகும். யாருமே நம்ப முடியாத விலையிலேயே இதை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி அறிமுகப்படுத்தியது. ரூ. 9.99 லட்சம் என்கிற விலையிலேயே அது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் (Battery-as-a-Service) எனும் திட்டத்தின்கீழ் விற்கப்படும் விலை ஆகும்.

அதாவது, வாகனத்தின் விலை மட்டுமே இதுவாகும். இந்த விலையில் விண்ட்ஸர் இவி-யை வாங்குபவர்களுக்கு பேட்டரி கிடைக்காது. பேட்டரிக்கான தொகையை பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக, ஒரு கிமீ டிராவல் செய்கின்றோம் என்றால் அதற்கு 3 ரூபாய் மற்றும் 50 காசுகள் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த விலை அறிவிப்பை மட்டுமே செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி அறிவித்திருந்தது. அதாவது முழுமையான விலை விபரத்தை அது அறிவிக்கவில்லை. இந்த நிலையிலேயே தற்போது விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரின் முழு விலை விபரத்தையும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

விண்ட்ஸர் இவி-க்கு ரூ. 13.50 லட்சம் எனும் விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். பேட்டரி மற்றும் வாகனம் இரண்டின் விலையும் சேர்ந்ததே இதுவாகும். இந்த தொகையைக் கொடுத்து விண்ட்ஸர் இவியை வாங்கும்போது கூடுதல் தொகையை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருக்காது.
அதாவது, பேட்டரி மற்றும் வாகனம் இரண்டிற்கான விலை என்பதால் கிமீ பயன்பாட்டிற்கான கட்டணத்தை நாம் செலுத்த வேண்டியிருக்காது. மேலும், முன்னதாக பார்த்தது ஆரம்ப நிலை வேரியண்டான எக்சைடு-இன் விலை ஆகும். இதேபோல், எக்ஸ்க்ளூசீவ் வேரியண்டிற்கு ரூ. 14.50 லட்சம் விலையும், எஸ்சென்ஸ் வேரியண்டிற்கு ரூ. 15.50 லட்சம் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும். ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம், பேட்டர்-அஸ்-எ-சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரை மட்டுமல்ல கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் இந்த திட்டத்தின்கீழ் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
இதன் விளைவாக கோமெட் இவி-யை ரூ. 4.99 லட்சத்திற்கும், இசட்எஸ் இவி-யை ரூ. 13.99 லட்சத்திற்கும் வாங்கிக் கொள்வதற்கான சூழல் உருவாகி இருக்கின்றது. இதன்கீழ் இந்த கார்களை வாங்கும்போது ஒரு கிமீ பயன்பாட்டிற்கு கோமெட் இவி-க்கு 2 ரூபாய் மற்றும் 50 காசுகளும், இசட்எஸ் இவி-க்கு ரூ. 4.5ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 60 சதவீத நிச்சய பை-பேக் திட்டமும் இந்த கார்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களின் அதிக விலைக்கு காரணமாக அதன் பேட்டரி பேக்குகள் இருக்கின்றன. இதனாலேயே பலர் இந்த மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே பேட்டரி பற்றிய கவலையை தீர்க்கும் பொருட்டு பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் எனும் திட்டத்தை எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கின்றது. எனவே வரும் நாட்களில் இ-காரின் விற்பனை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








