இது 2ஆவது மாசம்.. நேத்து முளைத்த காளானிடம் டாடா அடி வாங்குவது தொடர்கதையாகிருச்சு.. வசியம் வச்ச மாதிரி இருக்கு!
இந்தியாவை தாயகமாகக் கொண்டு பல தசாப்தங்களைக் கடந்து வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது டாடா மோட்டார்ஸ் (Tata Motors). இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து ரக வாகன உற்பத்தியையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இதனால்தான் வாகன உலகின் ஜாம்பவானாக டாடா மோட்டார்ஸ் அறியப்படுகின்றது. இத்தகைய நிறுவனமே தொடர்ச்சியாக ஓர் வெளிநாட்டு நிறுவனத்திடம் விற்பனையில் அடி வாங்கிக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எம்ஜி மோட்டார் (MG Motor), இதுவே அந்த வெளிநாட்டு நிறுவனம் ஆகும்.
மின்சார வாகன விற்பனையிலேயே எம்ஜி நிறுவனம் டாடா மோட்டார்ஸை வீழ்த்தி இருக்கின்றது. கடந்த 2024 நவம்பர் மாதத்தில் எம்ஜி நிறுவனம் கார்கள் ஒட்டுமொத்தமாக 6,019 யூனிட்டுகள் வரை விற்பனையாகின. இதில், 3,114 யூனிட்டுகள் எம்ஜி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய விண்ட்ஸர் இவி (Windsor EV) ஆகும்.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இது எம்ஜி-யின் ஒட்டுமொத்த விற்பனையில் 50 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைபோலவே நிறுவனத்தின் மற்ற மின்சார கார்களுக்கும் நல்ல விற்பனை வரவற்பை இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் பெற்றிருக்கின்றது. இத்தகைய மாபெரும் விற்பனை எண்ணிக்கையின் வாயிலாகவே எலெக்ட்ரிக் கார் பிரிவில் டாடா மோட்டார்ஸை வீழ்த்தி இருக்கின்றது, எம்ஜி மோட்டார்.
எம்ஜி உடன் ஒப்பிடுகையில், டாடா மோட்டார்ஸ் இ-கார் விற்பனையில் பின் தங்கிக் காணப்படுவது இது இரண்டாவது மாதம் ஆகும். சென்ற மாதத்திலும் மின்சார கார் விற்பனையில் எம்ஜி மோட்டாரே முன்னிலையில் இருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. எம்ஜி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் கால் தடம் பதித்தது.
அது, 2019 ஆம் ஆண்டிலேயே இந்திய சந்தையில் நுழைந்தது. மேலும், இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் வலம் வந்துக் கொண்டிருந்தாலும், இப்போதே அது மிக பெரிய அளவில் பிரபலமாகத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, அதன் மின்சார கார்களே அதை தூக்கி நிறுத்தத் தொடங்கி இருக்கின்றன.
குறிப்பாக, நிறுவனத்தின் விண்ட்ஸர் இவி வருகைக்கு பின்னரே நிறுவனம் மாபெரும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக அது மாறி இருக்கின்றது. முன்னதாக இந்த இடத்தை டாடா நெக்ஸான் இவி (Nexon EV)-யே அலங்கரித்து வந்தது.
விண்ட்ஸர் இவி-க்கு மட்டுமல்ல எம்ஜியின் மற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு நிறுவனம் அறிமுகப்படுத்திய 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) திட்டமே காரணம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் எம்ஜி எலெக்ட்ரிக் கார்களை விலை குறைவாக வாங்கிக் கொள்ள முடியும்.
உதாரணமாக, அந்த காரில் வழங்கப்படும் பேட்டரிக்கான தொகையை தவிர்த்து, காருக்கான விலையை மட்டும் செலுத்தினால் போதும். அந்தவகையில், விண்ட்ஸர் இவி 9.99 லட்ச ரூபாய்க்கே பேட்டரி அஸ் எ சர்வீஸின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த திட்டத்தின்கீழ் விண்ட்ஸர் இவி-யை வாங்கும்போது, அதன் பேட்டரிக்கு, பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கின்றது.
ஒரு கி.மீட்டருக்கு., ரூ. 3.5 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV)-க்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றது எம்ஜி. இதனால்தான் இவற்றின் விற்பனையும் 2024 நவம்பரில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஆனால், இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸான் இவி-யின் விற்பனை 1593 யூனிட்டுகளாக மட்டுமே இருக்கின்றது. இதேபோல், டாடா கர்வ் இவி 1,542 யூனிட்டுகளும், பஞ்ச் இவி 915 யூனிட்டுகள் வரையிலும் விற்பனையாகி இருக்கின்றன. சீன நிறுவனத்திற்கு சொந்தமான இங்கிலாந்து நாட்டு நிறுவனமே எம்ஜி மோட்டார் ஆகும்.
இந்த நிறுவனம் இந்திய சந்தைக்காக ஜேஎஸ்டபிள்யூ உடன் கை கோர்த்து இருக்கின்றது. இந்த இணைவிற்கு பின்னரே விண்ட்ஸர் இவி-யை அது விற்பனைக்கு களமிறக்கியது. இதுமட்டுமல்ல அடுத்த சில ஆண்டுகளுக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வருவதையும் அது இலக்காக நிர்ணயித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜிக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு மற்றும் அதன் வருங்கால பிளான்களை வைத்து பார்க்கையில் அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் அதுவே மின்சார கார் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸும் இதற்கு ஈடுகொடுக்கும் விதமாக சில விலை குறைவான புதுமுக கார் மாடல்களைக் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








