பெட்ரோல் கார்களுக்கு குட் பை சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு!! ரூ.10 லட்சத்தில் எலக்ட்ரிக் காரை உருவாக்கிய எம்ஜி
எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV), இந்தியாவில் புதியதாக விற்பனைக்கு வந்து உள்ள எலக்ட்ரிக் கார். ரூ.9.99 லட்சத்தில் இருந்து இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இந்த விலையில், பேட்டரிக்கான தொகை அடங்கவில்லை. ஏனெனில், பேட்டரியை ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு ரூ.3.5 என்கிற கட்டணத்தில் வாடகைக்குவிட எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. இது உண்மையில் புதுமையான முயற்சி ஆகும். இது எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு எந்த அளவிற்கு பயன்தர உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் விற்பனையில் இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காருக்கு டாடா நெக்ஸான் இவி, மஹிந்திரா எக்ஸ்யூவி400 மற்றும் சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார்கள் போட்டியாக உள்ளன. பேட்டரியை வாடகைக்கு விடுவதை தவிர்த்து, எம்ஜி விண்ட்சர் இவி கார் இந்த அனைத்து எலக்ட்ரிக் கார்களுக்கும் சவாலான போட்டியாக இருக்கும். இந்த எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான வித்தியாசங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பரிமாண அளவுகள்: இந்த 4 எலக்ட்ரிக் கார்களுள் டாடா கர்வ் இவி ஆனது அதிக நீளமானது ஆகும். இந்த காரின் நீளம் 4,310மிமீ ஆகும். இதற்கு அடுத்தப்படியாக விண்ட்சர் இவி காரின் நீளம் 4,295மிமீ ஆக உள்ளது. ஆனால், அகலம் மற்றும் உயரத்தில் எம்ஜி விண்ட்சர் இவி பெரியதாக உள்ளது. இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரின் அகலம் 1,850மீமீ, உயரம் 1,677மிமீ மற்றும் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,800மிமீ ஆகும்.
தரையில் இருந்து காரின் அடிப்பகுதி ஆனது டாடா நெக்ஸான் இவி காரில் அதிகமாக 205மிமீ ஆக உள்ளது. பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி விண்ட்சர் இவி காரில் 604 லிட்டர்களாக உள்ளது. விண்ட்சர் இவி மற்றும் கர்வ் இவி என இரண்டிலும் 18 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால், நெக்ஸான் இவி மற்றும் எக்ஸ்யூவி400 கார்களில் சக்கரங்கள் 16 இன்ச்சில் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. பெரிய அளவிலான கார் போன்று இருந்தாலும், விண்ட்சர் இவி ஆனது 5 பேர் மட்டுமே பயணிப்பதற்கு ஏற்ற காராகும்.
பவர்டிரெயின் & ரேஞ்ச்: இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் 4 எலக்ட்ரிக் கார்களிலும் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் செட்-அப் வழங்கப்படுகிறது. அதேபோல், இவை அனைத்திலும் இயக்க ஆற்றல் ஆனது முன் சக்கரங்களுக்கு செல்கிறது. இந்த நான்கில் பவர்ஃபுல்லான எலக்ட்ரிக் கார் என்றால் அது டாடா கர்வ் இவி ஆகும். அதிகப்பட்சமாக 167 எச்பி வரையிலான இயக்க ஆற்றல் இந்த காரில் கிடைக்கிறது.
டார்க் திறனை பொறுத்தவரையில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் 310 என்.எம் டார்க் திறன் வரையில் கிடைக்கிறது. இதனால், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரில் 0-இல் 100kmph வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில் எட்டிவிட முடிகிறது. புதிய விண்ட்சர் இவி காரில் 38kWh திறன் கொண்ட பேட்டரி பேக் கொடுக்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 331கிமீ தொலைவிற்கு காரை இயக்கிச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை: புதிய எம்ஜி விண்ட்சர் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த விலையில் காருக்கான பேட்டரி தொகை அடங்காது. பேட்டரியை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு கிமீ தொலைவிற்கும் ரூ.3.5 சர்வீஸ் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுப்பக்கம், டாடா மோட்டார்ஸின் புதிய எலக்ட்ரிக் காரான கர்வ் இவி-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.21.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நெக்ஸான் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் டாடா நிறுவனம் தற்காலிகமாக ரூ.3 லட்சம் வரையில் குறைத்துள்ளது. அக்டோபர் 31ஆம் வரையில் அமலில் இருக்கவுள்ள இந்த விலை குறைப்பின்படி, நெக்ஸான் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.49 லட்சம் - ரூ.16.29 லட்சம் வரையில் குறைந்துள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15.49 லட்சத்தில் இருந்து ரூ.17.69 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று அவற்றின் அதிகப்படியான விலையாகும். அதனை குறைக்கும் பொருட்டே விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் பேட்டரியை வாடகைக்கு வழங்கும் திட்டத்தில் எம்ஜி மோட்டார் இறங்கியுள்ளது. இது பயன்தருமா? விற்பனையில் போட்டியாக உள்ள மற்ற எலக்ட்ரிக் கார்களை எம்ஜி விண்ட்சர் இவி சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








