இரண்டும் ஒரே விலையில் கிடைக்குது என்றால் நம்பவே முடியல!! இந்த விஷயத்தில் டாடா மோட்டார்ஸை எம்ஜி முந்திவிட்டது..
இந்தியாவின் முண்ணனி ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்ததற்கு பிறகு எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, விண்ட்சர் இவி (Windsor EV) என்கிற எலக்ட்ரிக் காரை எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது. எம்ஜி மோட்டாரில் இருந்து ஏற்கனவே கோமெட் இவி மற்றும் இசட்.எஸ் இவி என 2 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், அவற்றை காட்டிலும் விண்ட்சர் இவி ஆனது கொஞ்சம் ஸ்பெஷலானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணம், எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் பேட்டரி ஆனது வாடகை முறையில் வழங்கப்பட உள்ளது. மார்க்கெட்டில் இந்த எலக்ட்ரிக் காருக்கு டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார் போட்டியாக விளங்குகிறது. இந்த இரு விலை குறைவான எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி பார்க்கலாம்.

பவர்ட்ரெயின்: எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் 38kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக அதிகப்பட்சமாக 134 பிஎச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம் என எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 331கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்றும் எம்ஜி தெரிவித்துள்ளது.
மறுப்பக்கம், டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரில் 25kWh மற்றும் 35kWh என இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்ஸ் வழங்கப்படுகிறது. இதில் 25kWh பேட்டரி பேக்கில் 80 பிஎச்பி மற்றும் 114 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், 35kWh பேட்டரி பேக்கில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக 120 பிஎச்பி மற்றும் 190 என்.எம் டார்க் திறனையும் பெறலாம்.
அதேபோல், ரேஞ்சும் பேட்டரியை பொறுத்து டாடா பஞ்ச் இவி காரில் மாறுப்படுகிறது. அதிகப்பட்சமாக 35kWh பேட்டரி உடன் 365கிமீ தொலைவிற்கு பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரை இயக்கி செல்லலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 25kWh பேட்டரி உடன் சற்று குறைவான இயக்க ஆற்றலையே இந்த டாடா எலக்ட்ரிக் காரில் பெற முடியும்.

விலை: புதிய எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் மொத்தம் 3 விதமான வேரியண்டகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விலை ரூ.9.99 லட்சம் ஆகும். இந்த விலையில் காருடன் பேட்டரி கிடைக்காது. பேட்டரியை வாடகை முறையில் வாங்க வேண்டியதாக இருக்கும். இவ்வாறு வாடகையாக பேட்டரியை வாங்கும்போது ஒரு கிமீ-க்கு ரூ.3.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதாவது, எம்ஜி விண்ட்சர் இவி காருக்கான பேட்டரியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். சார்ஜ் நிரப்பப்பட்ட புதிய பேட்டரியை வாங்கும்போது, பழைய பேட்டரியில் கார் இயக்கப்பட்ட தொலைவிற்கான கட்டணத்தை கிமீ-க்கு ரூ.3.5 என செலுத்த வேண்டியிருக்கும். மறுப்பக்கம், டாடா பஞ்ச் இவி கார் ஸ்மார்ட், அட்வென்ச்சர், எம்பவர்டு, எம்பவர்டு பிளஸ் என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.14.29 லட்சம் வரையில் உள்ளன. இவை பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் ஆன்-ரோடு விலைகள் ஆகும். விலை தான் இந்த எம்ஜி மற்றும் டாடா எலக்ட்ரிக் கார்களை நேரெதிர் போட்டியாக நிறுத்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தை பொறுத்தவரையில் டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் எம்ஜியின் புதிய விண்ட்சர் இவி ஆனது பெரியது ஆகும். இருப்பினும், இத்தகைய எலக்ட்ரிக் காரை ரூ.9.99 லட்சத்தில் எம்ஜி வழங்கியிருப்பதற்கு காரணம், இந்த எலக்ட்ரிக் காரில் பேட்டரி ஆனது வாடகை முறையில் வழங்கப்பட உள்ளதாகும். இதே பாணியில் டாடா பஞ்ச் இவி விற்பனை செய்யப்பட்டால், இந்த டாடா எலக்ட்ரிக் காரின் விலை இன்னும் ரூ.2 லட்சம் வரையில் குறைவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








