முதல் நாளிலேயே 15,000க்கும் அதிகமான புக்கிங்!.. நீங்களும் புக் பண்ணிட்டீங்களா! டாடா கார் இனி வித்த மாதிரிதான்!
யாருமே நம்ப முடியாத விலைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு புக்கிங் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்ஜி மோட்டார்(MG Motor), இந்தியாவில் சமீபத்தில் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது இன்டெலிஜன்ட் சியூவி (Intelligent CUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் சியூவி ரக கார் மாடல் இதுவே ஆகும். இதற்கே இந்தியாவில் மிக சிறப்பான எண்ணிக்கையில் புக்கிங் கிடைத்திருக்கின்றது.
15 ஆயிரத்து 176 யூனிட்டுகளுக்கான புக்கிங்கே விண்ட்ஸர் இவி-க்கு கிடைத்திருக்கின்றது. இந்த மாபெரும் எண்ணிக்கை ஒரு நாளில் கிடைக்கப்பெற்றவை ஆகும். எம்ஜி விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகள் அக்டோபர் 3, காலை 7.30 மணி அளவிலேயே அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இந்த நிலையிலேயே அதற்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் குவிந்திருக்கின்றன. இந்தியாவில் வேறு எந்த எலெக்ட்ரிக் கார் மாடலுக்கும் இந்த அளவிற்கு ஒரே நாளில் புக்கிங் கிடைத்ததில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே, இந்த நிகழ்வை தற்போது எம்ஜி நிறுவனம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.
விண்ட்ஸர் இவிக்கு இந்த அளவிற்கு அதிக வரவேற்புக் கிடைக்க நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டமே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. இந்த திட்டத்தின்கீழ் விண்ட்ஸர் இவியை வாங்கும்போதே மிக குறைவான தொகையில் வாங்கிக் கொள்ள முடியும். ரூ. 9.99 லட்சத்திற்கே அக்காரை வாங்கிக் கொள்ள முடியும்.
இதன் வாயிலாக ரூ. 3.5 லட்சம் வரை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' திட்டத்தின்கீழ் வாங்கும் போது அக்காரில் இருக்கும் பேட்டரி சொந்தம் கொண்டாட முடியாது. ஆகையால், ஒரு கிமீ பயணத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த கட்டணத்தைச் செலுத்த விருப்பமில்லை எனில் அதே காரை வாங்க ரூ. 13.49 லட்சம் வரை செலவிட வேண்டும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரை மூன்று விதமான வேரியண்டுகளில் வாங்கிக் கொள்ள முடியும். எக்சைடு (Excite), எக்ஸ்க்ளூசீவ் Exclusive) மற்றும் எஸ்சென்ஸ் (Essence) ஆகியவையே அவை ஆகும்.
இந்த மூன்றையும் 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன்படி காரை வாங்கும்போது ரூ. 3.5 லட்சம் இவற்றிலும் சேமிக்க முடியும். மூன்றிலும் ஒரே மாதிரியான திறனை வெளியேற்றக் கூடிய பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 332 கிமீ ரேஞ்சை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கையும், 136 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையுமே இந்த காரில் எம்ஜி வழங்கி இருக்கின்றது. நிற தேர்வை பொருத்த வரை நான்கு விதமான ஆப்ஷன்களில் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும்.
ஸ்டார்பர்ஸ்ட் பிளாக் (Starburst Black), பெர்ல் ஒயிட் (Pearl White), கிளே பீஜ் (Clay Beige) மற்றும் டர்கிஸ் கிரீன் (Turquoise Green) ஆகியவையே அவை ஆகும். எம்ஜி நிறுவனம் இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சில திட்டங்களை அறிவித்திருக்கின்றது. மிக முக்கியமாக ஓராண்டிற்கு இலவசமாக சார்ஜ் செய்துக் கொள்ளும் திட்டம், நிச்சய 60 சதவீத பை-பேக் திட்டம், எம்ஜி இ-ஷீல்டு ஆகியவற்றையே வழங்க இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக டாடா நெக்ஸான் இருக்கின்றது. இப்போது விண்ட்ஸர் இவிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்து பார்க்கையில், வரும் நாட்களில் நெக்ஸானுக்கு மிகப் பெரிய சவாலாக விண்ட்ஸர் இவி அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவே அக்காருக்கு கிடைத்த முதல் நாள் புக்கிங் நிலவரம் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








