விமானம் மாதிரியான கார் நாளை களமிறங்குது!.. எஸ்யூவி கார்கள் எல்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க!
விமானத்தின் முகப்பு பகுதியைப் பிரதிபலிக்கும் முன் பக்கத்தைக் கொண்ட கார் ஒன்று இந்தியாவில் நாளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. எம்ஜி (MG) நிறுவனத்தின் விண்ட்ஸர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் கார் மடால்-தான் அது ஆகும். இப்போதைய நிலவரப்படி எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர்களைக் கூடுதலாக தன் பக்கம் வளைத்து போடும் பொருட்டு இப்போது புதிதாக விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரையும் எம்ஜி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது பார்க்க மட்டுமல்ல குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களிலும் விமானத்தை பிரதிபலிக்கின்ற வகையிலேயே இருக்கும்.

மிக முக்கியமாக இருக்கைகள் விஷயத்திலேயே இந்த கார் விமானத்தைப் போல இருக்கும். விமானங்களில் காணப்படக் கூடிய ரெக்லைனர் வகை இருக்கைகளே விண்ட்ஸர் இவியில் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதை, 135 டிகிரி வரை சாய்த்துக் கொள்ள முடியுமாம். இதுமட்டுமில்லைங்க, இதில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து இருக்கைகளையும் மடித்துக் கொள்ளவும் முடியும் என கூறப்படுகின்றது.
ஆகையால், இந்த கார் பயணிகளுக்கு உகந்த வாகனமாக மட்டுமல்லாமல் அதிக பொருட்களை ஏற்றிச் செல்லவும் உதவியாக இருக்கும் என தெரிகின்றது. இதுமாதிரியான அம்சங்களுடன் விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கின்ற காரணத்தினாலேயே பலரின் எதிர்பார்ப்பை இப்போதே இந்த கார் கவர்ந்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, இந்தியாவின் முதல் சியூவி (Crossover Utility Vehicle) ரக கார் மாடல் இதுவே ஆகும். எஸ்யூவி கார்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அதிக இட வசதியை இந்த ரக கார் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் விண்ட்ஸர் இவியின் வருகை எஸ்யூவி ரக கார்களுக்கு மிகப் பெரிய அளவில் சவால்விடும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த காரை தொழில்நுட்ப அம்சங்களால் நிரப்பப்பட்ட வாகனமாக எம்ஜி தயார் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. பெரிய பனோரமிக் சன்ரூஃப், 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகள் விண்ட்ஸர் இவியில் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இதுதவிர, டிரைவர்களுக்கான 8.8 அங்குல டிஜிட்டல் திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்டு சீட், பன்முக வண்ணங்களில் ஒளிரும் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பவர் டெயில்கேட் ஆகிய அம்சங்களும் இந்த காரில் இடம் பெறும் என கூறப்படுகின்றது.
மிக முக்கியமாக இந்த காரின் உட்பக்கம் பார்க்கவும் மிகவும் பிரீமியம் லுக்கில் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது. அதற்கேற்ப லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், கருப்பு மற்றும் தங்க நிறம் கொண்ட இன்செர்ட்டுகள் ஆகியவற்றால் காரின் கேபின் அலங்கரிக்கப்பட உள்ளன. மேலும், இதன் இருக்கைகளும் தனித்துவமான லுக்கில் இருக்கும்.
இந்த கார் பிரீமியம் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களில் மட்டுமல்ல பாதுகாப்பு தருவதிலும் மிக சிறந்த வாகனமாக இருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவையே இதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து, அடாஸ் (ADAS) அம்சமும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகையால், எம்ஜி நிறுவனத்தின் இந்த வாகனமும் இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலையும் சற்று பட்ஜெட்டிற்குள்ளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை இதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விண்ட்ஸர் இவி நாளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி சியூவி ரக கார் பிரிவில் ஒரு போட்டிகூட இல்லாத நிலையே தென்படுகின்றது. ஆகையால், இந்த கார் விற்பனையில் தனிக்காட்டு ராஜாவை போல இருக்கும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








