எத்தனை வெளிநாட்டு கார் நிறுவனம் வேண்டுமானாலும் வரட்டும்... இந்த விஷயத்தில் மஹிந்திரா தான் கிங்கு!!
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு மாதத்திற்கு மாதம் மக்கள் மத்தியில் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், மார்க்கெட்டில் புது, புது எஸ்யூவி கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அதேநேரம், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஸ்யூவி கார்களின் விற்பனையும் சீரான வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எஸ்யூவி கார்கள் பல விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, அளவில் சிறியதான மைக்ரோ எஸ்யூவி கார்களில் இருந்து, அளவில் பெரியதான ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அவற்றில், 4.4 மீட்டரில் இருந்து 4.7 மீட்டர் வரையில் நீளம் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் தற்சமயம் இந்தியாவில் 9 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு விதமான கார் பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்படும் அவற்றுள், கடந்த 2024 ஜூன் மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக வழக்கம்போல் முதலிடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது.

மார்க்கெட்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான வெர்சன்களில் ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டையும் சேர்த்து மொத்தமாக கடந்த ஜூன் மாதத்தில் 12,307 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2023 ஜூன் மாதத்தில் 8,648 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது, ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது 3,659 யூனிட்கள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் மொத்த எண்ணிக்கை 23,986 ஆகும். அதாவது, இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை வாங்குவோரில் 2இல் ஒருவரது தேர்வு மஹிந்திரா ஸ்கார்பியோ ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் உள்ள கார்களுள் ஸ்கார்பியோவும் ஒன்றாகும்.

ஸ்கார்பியோவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்திலும் மஹிந்திராவின் காராக எக்ஸ்யூவி700 உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 5,928 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, முதலிடத்தில் உள்ள ஸ்கார்பியோவுக்கும், 2வது இடத்தில் உள்ள எக்ஸ்யூவி700க்கும் ஏறக்குறைய 6,500 யூனிட்கள் வித்தியாசம் உள்ளது. 2023 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை ஓரளவிற்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், 2023 ஜூன் மாதத்தில் 5,391 எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த ஆண்டு ஜூனை காட்டிலும் இந்த ஆண்டு ஜூனில் 537 எக்ஸ்யூவி700 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 3வது இடத்தில், எம்ஜி ஹெக்டர் உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 1,713 ஹெக்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெக்டர் பிளஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது.

2023 ஜூன் மாதத்தில் 2,170 ஹெக்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் டாடா மோட்டார்ஸின் சஃபாரி மற்றும் ஹெரியர் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,394 மற்றும் 1,347 ஆகும். ஹெரியரை காட்டிலும் சஃபாரி காரின் விலை அதிகம் ஆகும். இருப்பினும், கடந்த மாதத்தில் ஹெரியரை காட்டிலும் சஃபாரி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் 6வது இடத்தில் ஹூண்டாய் அல்கஸார் 882 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2023 ஜூன் மாதத்தில் சுமார் 2,119 அல்கஸார் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 7வது மற்றும் 8வது இடங்களில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் கார்கள் முறையே 216 மற்றும் 114 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி 9வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (85) உள்ளது.
| Rank | Mid Size SUVs | June'24 | June'23 | Growth (%) YoY |
| 1 | Mahindra Scorpio / N | 12,307 | 8,648 | 42.31 |
| 2 | Mahindra XUV700 | 5,928 | 5,391 | 9.96 |
| 3 | MG Hector / Plus | 1,713 | 2,170 | -21.06 |
| 4 | Tata Safari | 1,394 | 1,663 | -16.18 |
| 5 | Tata Harrier | 1,347 | 2,040 | -33.97 |
| 6 | Hyundai Alcazar | 882 | 2,119 | -58.38 |
| 7 | Jeep Compass | 216 | 211 | 2.37 |
| 8 | Hyundai Tucson | 114 | 263 | -56.65 |
| 9 | Volkswagen Tiguan | 85 | 133 | -36.09 |
| 10 | Citroen C5 Aircross | 0 | 12 | -100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போதைக்கு 9 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரையில் 10வது மிட்-சைஸ் எஸ்யூவி காராக சிட்ரோனின் சி5 ஏர்கிராஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், அந்த சிட்ரோன் கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் விற்பனை மட்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









