கொடி பறக்குதா... உலகையே மிரள வைத்த தமிழ்நாட்டின் அசுர வளர்ச்சி... தூக்கீட்டாங்கமா நம்ம தூத்துக்குடி பசங்க!
வின்ஃபாஸ்ட் (VinFast)... இன்று இந்தியாவே உச்சரித்து கொண்டுள்ள ஒரு பெயராக மாறியுள்ளது. இது வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம் ஆகும். அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கு போட்டியாக வின்ஃபாஸ்ட் இருந்து வருகிறது.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை (Manufacturing Unit) தூத்துக்குடியில் (Thoothukudi) அமைக்கப்படவுள்ளது. இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை இதுதான். இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப்ரவரி 25) கோலாகலமாக அரங்கேறியுள்ளது.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் (M. K. Stalin) மற்றும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நகருக்கு அருகே உள்ள சில்லாநத்தம் (Sillanatham) பகுதியில்தான் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைகிறது. அங்குள்ள சிப்காட் (SIPCOT) வளாகத்தில், 408 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக வின்ஃபாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இது தற்போதைய நிலையில் கையெழுத்தாகியுள்ள ஒட்டுமொத்த முதலீடு ஆகும். ஆனால் முதற்கட்டமாக 4 ஆயிரம் கோடி ரூபாய்தான் முதலீடு செய்யப்படவுள்ளது. எனினும் படிப்படியாக 16 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும்.

முதற்கட்டமாக இந்த தொழிற்சாலையின் ஒரு ஆண்டுக்கான உற்பத்தி திறன் (Annual Production Capacity), 1.50 லட்சம் எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும். இதன் மூலமாக 3,500 பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக 16 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும்போது, நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு இந்த தொழிற்சாலை வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்த தொழிற்சாலை மூலம் தமிழ்நாட்டின் 3வது வாகன உற்பத்தி மையமாக (Auto Hub) தூத்துக்குடி உருவெடுத்துள்ளது. முன்னதாக சென்னை (Chennai) மற்றும் ஓசூர் (Hosur) ஆகியவை, தமிழ்நாட்டின் முதன்மையான வாகன உற்பத்தி மையங்களாக இருந்து வருகின்றன. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு மற்றொரு பெருமையையும் சேர்த்துள்ளது.
இந்தியாவில் 3 வாகன உற்பத்தி மையங்களை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதுதான் அது. இந்த புதிய தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 15 மாதங்களில் இங்கு முதல் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்பட்டு விடும். அதாவது வரும் 2025ம் ஆண்டு மே மாதம் இங்கு உற்பத்தி பணிகள் தொடங்கி விடும்.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் முதலில் விஎஃப் இ-34 (VF e-34) எலெக்ட்ரிக் காரையும், அதை தொடர்ந்து விஎஃப்6 (VF6) மற்றும் விஎஃப்7 (VF7) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்திற்காக இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போதுதான் (Tamil Nadu Global Investors Meet), வின்ஃபாஸ்ட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding - MoU) கையெழுத்தானது.
ஆனால் அதற்கு அடுத்த மாதமே தொழிற்சாலையை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றிருப்பது, தமிழ்நாடு அரசு வேகமாக இயங்கி வருவதை காட்டுவதாக உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் உலக அளவில் மிகவும் முக்கியமான வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications








