இந்தியாவில் எங்கு தேடினாலும் பார்க்க முடியாத மாருதி வாகனம் - என்னங்க மொத்தமா இப்படி மாத்திட்டீங்க!!
கார் மாடிஃபிகேஷன் (Car Modification)-க்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது. அதாவது, கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள நம் நாட்டில் நிறைய பேர் விரும்புகின்றனர். குறிப்பாக, மற்ற யாரிடமும் இல்லாத வகையில் தனது வாகனத்தை ஆற்றல்மிக்கதாக மாற்றிக் கொள்கின்றனர். அந்த வகையில், இங்கு ஒரு மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தில் வழக்கமான என்ஜினை பவர்ஃபுல்லானதாக மாற்றும் முயற்சியாக டர்போசார்ஜர் கிட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஜிம்னி வாகனம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கரடு, முரடான சாலைகளிலும் இயங்கக்கூடிய ஆஃப்-ரோடு வாகனங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே நல்ல டிமாண்ட் உள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில், மாருதி சுஸுகியின் ஜிப்ஸி எந்த அளவிற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது என்பதை நான் கூற வேண்டியது இல்லை. அதன்பின், மஹிந்திரா தார் வாகனம் அந்த இடத்தை பிடித்தது.

தற்போதைய நிலவரப்படி, ஆஃப்-ரோடு எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகுவது மஹிந்திரா தார் ஆகும். இதனை முறியடிக்கும் முயற்சியாக ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னி வாகனத்தை இந்தியாவில் மாருதி சுஸுகி விற்பனைக்கு கொண்டுவந்தது. ஆரம்பத்தில் ஜிம்னியின் விற்பனை ஓரளவிற்கு நன்றாக இருந்தாலும், சமீப மாதங்களாக மஹிந்திரா தார் விற்பனையாகுவதில் 10% கூட ஜிம்னி விற்பனையாகுவதில்லை.
சரி, இந்த குறிப்பிட்ட மாடிஃபைடு ஜிம்னி வாகனத்திற்கு வருவோம். மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னியில் வழக்கமாக 1.5 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினை பொருத்துகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎஸ் மற்றும் 135 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 105 பிஎஸ் என்பது ஓரளவிற்கு போதுமான பவர் அவுட்-புட் தான்.

இருப்பினும், இது போதாது என எண்ணிய ஜிம்னி ஓனர் ஒருவர் தனது வாகனத்தின் என்ஜின் சிஸ்டத்தில் டர்போசார்ஜரை புதியதாக பொருத்தி உள்ளார். இதன் மூலமாக, இந்தியாவின் முதல் டர்போர்சார்ஜ்டு ஜிம்னி வாகனமாக இது விளங்குகிறது. இந்த ஜிம்னி வாகனத்தில் இந்த வேலைப்பாடுகளை டெல்லியை சேர்ந்த பிராப் ஸ்பீடு என்கிற மெக்கானிக் ஷாப்பும், கேரேஜ் 82 என்கிற மெக்கானிக் ஷாப்பும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
இதுதொடர்பாக யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஜிம்னியில் 155 பிஎஸ் மற்றும் 220 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம் என தெரிவித்துள்ளனர். இது ஸ்டாக் என்ஜின் கொடுப்பதை காட்டிலும் சுமார் 50% அதிக இயக்க ஆற்றல் ஆகும். இதற்காக, ஃபுல் அவோ (AVO) கிட்டை இந்த ஜிம்னியில் பொருத்தியுள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதன்படி இந்த வாகனத்தில் என்னென்ன பார்ட்ஸ் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன என்பதையும் வீடியோவில் பொனெட்டை திறந்து காட்டியுள்ளனர். இந்த பார்ட்ஸில் முக்கியமானது டர்போ கிட் ஆகும். டர்போசார்ஜர் உடன் வளையாத இரும்பு குழாய் மூலமாக அவோ ஃபில்டர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மட்டுமின்றி, இந்த ஜிம்னியில் நிறைய பிளம்பிங் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றுடன், என்ஜின் சிஸ்டத்தை குளிர்விக்க இண்டர் கூலரையும் புதியதாக பொருத்தியுள்ளனர். டனாபே நிறுவனத்தின் ஸ்ட்ரட் பிரேஸ் ஆனது என்ஜின் பகுதியில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. அதிக செயல்படுதிறனுக்காக, என்ஜினில் இருந்து புகையை வெளியிடும் அடிக்குழாயை மாடிஃபை செய்து பொருத்தியுள்ளனர். மேலும், இந்த ஜிம்னி வாகனத்தில் வழக்கமான டயர்களுக்கு பதிலாக அப்பல்லோ அப்டெரா டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அதிலிலும் இவ்வாறு வாகனத்தின் என்ஜின் சிஸ்டத்தில் கை வைத்தால் உங்களது வாகனத்தை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்வதற்கு கூட வாய்ப்புள்ளது. ஆதலால், இவ்வாறான மாடிஃபிகேஷன்களை செய்ய விரும்புவோர் முறையான & அங்கீகரிக்கப்பட்ட கார் கஸ்டமைஸ் நிறுவனங்களை அணுகுவது நல்லது.


Click it and Unblock the Notifications









