நம்ம தமிழ்நாட்டு நிறுவனத்துக்கு இந்த அளவுக்கு மூளையா... வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கூட வராத யோசனை!!
புதுமையான வாகனங்களை வடிவமைப்பதில் நம் தமிழர்கள் எப்போதுமே சளைத்தவர்கள் இல்லை. அந்த வகையில், இங்கு ஒரு தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் ரேஸ் கார் மற்றும் சூப்பர் பைக் என இரண்டும் கலந்த கலவையில் ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி அசத்தி உள்ளது. நேர்த்தியான டிசைன் உடன் 3 சக்கரங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் பொது மக்களின் பார்வைக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு சாம்பிளுக்காக ஒன்றே ஒன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட் விரிவடைந்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிறைய இடங்களில் தோன்றியுள்ளன. அவற்றின் மூலமாக பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாகி உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து உருவான புதுமையான எலக்ட்ரிக் வாகனம் தான், பேட் பாய் (Bad Boy) என்கிற 3-சக்கர எலக்ட்ரிக் வாகனம் ஆகும்.

தமிழ்நாட்டின் சுரேஷ் சம்பந்தம் என்பவர் சிஇஓ-ஆக பொறுப்பு வகிக்கும் சாஸ் (SaaS) நிறுவனம் முதல் விசி (Mudhal VC) என்கிற பெயரில் முதலீட்டு நிறுவனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த முதல் விசி நிறுவனத்தின் முக்கியமான பணி என்னவென்றால், புதிய முயற்சிகளில் ஈடுப்படும் மற்ற கார்ப்பிரேட் நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் மூலம் இலாபத்தை சம்பாதிப்பதாகும்.
மார்க்கெட்டிற்கு புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் கூட முதலீடு செய்ய முதல் விசி திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதலீட்டு தொகை ஆனது ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு முதலீட்டில் உருவானதே பேட் பாய் எலக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த வாகனத்திற்கு முன்னால் இரு சக்கரங்களும், பின்னால் ஒரு சக்கரமும் உள்ளது. இவ்வாறான 3-சக்கர வாகனங்களை 'ட்ரைக்' (Trike) என அழைக்கின்றனர்.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த வாகனம் தற்போதைக்கு ஒன்றே ஒன்றுதான் உருவாக்கப்பட்டுள்ளது. இனி மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் ஆய்வுகள் ஓகே ஆனவுடன் நிறைய பேட் பாய் எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்படும். இந்த வாகனத்தின் விலை ரூ.15 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. முக்கியமாக இளம் தலைமுறையினரை டார்க்கெட் செய்து இந்த எலக்ட்ரிக் வாகனம் உருவாக்கப்படுகிறது.
வாகனத்தை தாங்கி நிற்கும் சேசிஸ் ஆனது அகலம் குறைவானதாகவும், எடை குறைவானதாகவும் உள்ளது. முக்கியமாக, ஏரோடைனாமிக்ஸை கருத்தில் கொண்டு இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளனர். அதாவது, எதிர்காற்றுக்கு ஏற்ப செயல்படும் விதத்தில் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இந்த வாகனத்தினுள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

பேட் பாய் ட்ரைக் எலக்ட்ரிக் வாகனத்தின் நீளம் 4000மிமீ, அகலம் 1400மிமீ, உயரம் 1200மிமீ ஆகும். அதேபோல், இந்த வாகனத்தின் அகலமும் 1200மிமீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2800மிமீ ஆகும். தரையில் இருந்து வாகனத்தின் அடிப்பகுதி ஆனது வெறும் 180மிமீ உயரத்தில் உள்ளது. வெறும் 4.6 மீட்டர் ஆரத்திற்குள் இந்த எலக்ட்ரிக் வாகனத்தை திருப்பிவிட முடியும்.
0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த வாகனத்தின் டாப்-ஸ்பீடு 200kmph ஆகும். இவை தவிர்த்து, இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் வழங்கப்பட உள்ள பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் குறித்த விபரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 400கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக இந்த வாகனம் உருவாக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான டிரைக் வாகனங்கள் நம் இந்தியாவிற்கு மிகவும் புதியதே. இதனால், நம்ம ஊர் சாலைகளுக்கு இத்தகைய 3-சக்கர வாகனம் சரிப்பட்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், முதல் விசி நிறுவனத்தின் இந்த முயற்சியை உண்மையில் பாராட்டியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications









