பணத்தை ரெடி பண்ணி வெச்சிக்கோங்க!! இந்த மே மாதத்தில் புதுசா 3 கார்கள் விற்பனைக்கு... புக் பண்ண தயாரா?
ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான கார்கள் விற்பனையாகும் நம் இந்தியாவில் அவ்வப்போது புது, புது கார்கள் அறிமுகம் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றே. அதன்படி, இந்த 2024 மே மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் சில கார்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. நமது கணிப்பின் படி இந்தியாவில் இந்த மே மாதத்தில் 3 கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதில் 2 கார்கள் மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு உள்ளேயே அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஒரு காரின் அறிமுகம் உறுதியாக தெரியவில்லை. ஆதலால், இந்த மே மாதத்தின் கடைசி 15 நாட்களில் எந்தவொரு புதிய கார் அறிமுகமும் இல்லாமலும் போகலாம். புதிய 2024 மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 3 கார்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஃபோர்ஸ் குர்கா 5-கதவு (Force Gurkha 5-Door): 3-கதவுகளுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபோர்ஸ் குர்கா வாகனம் புதியதாக 5-கதவு வெர்சனில் விற்பனை செய்யப்பட உள்ளது. 5 கதவுகளை கொண்ட 2024 ஃபோர்ஸ் குர்கா வாகனம் மிக சமீபத்தில் தான் வெளியீடு செய்யப்பட்டது. அதாவது வாகனத்தை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டன.
அதனை தொடர்ந்து, மே 2ஆம் தேதி விலைகள் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக குர்கா 5-கதவு வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேநேரம், 3 கதவுகளை கொண்ட ஃபோர்ஸ் குர்கா வாகனமும் சில புதிய வசதிகள் மூலமாக அப்டேட் செய்யப்பட உள்ளது. 5-டோர் ஃபோர்ஸ் குர்கா வாகனத்தின் ஆரம்ப விலையை ரூ.16 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவில் தற்சமயம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார் அறிமுகம், 2024 ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் ஆகும். ஏனெனில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் முதன்மையானது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். இத்தகைய கார் மிக முக்கியமான அப்டேட்களை பெறவுள்ளது. அதாவது, தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதான ஸ்விஃப்ட் கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் இந்த மே மாதத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறதே தவிர்த்து, சரியாக எந்த தேதியில் என்பது தெரியவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மே 15ஆம் தேதிக்குள் புதிய ஸ்விஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுவிடும். இதன் விலையை ரூ.6 லட்சமாக எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில், இன்று (மே 1) முதல் 2024 ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன.

டாடா அல்ட்ராஸ் ரேஸர் (Tata Altroz Racer): கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் சார்பில் அல்ட்ராஸ் ரேஸர் கார் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டில் நடைபெற்ற முதல் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 கண்காட்சியிலும் இந்த கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. வழக்கமான அல்ட்ராஸ் காரின் செயல்திறன்மிக்க வெர்சனாக அல்ட்ராஸ் ரேஸர் விளங்குகிறது.
டாடா நெக்ஸானில் பொருத்தப்படுகின்ற 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் புதிய அல்ட்ராஸ் ரேஸர் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், இந்த காரின் அறிமுக தேதி இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த மே மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.10 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த மே மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் அவ்வளவாக நிறைய கார்கள் அறிமுகம் செய்யப்பட போவதில்லை. டாடா அல்ட்ராஸ் ரேஸர் காரின் அறிமுகம் உண்டா? இல்லையா? என்கிற நிலையிலேயே உள்ளது. இருப்பினும், 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் இந்த குறைகள் அனைத்தையும் மறைத்துவிடும்.


Click it and Unblock the Notifications









