கார் வாங்கும் பிளானில் இருந்தால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!! ஆகஸ்ட்டில் தான் எல்லா புது காரும் வருது...
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி வருகின்றன. பொதுவாகவே, இந்தியர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தான் அதிக எண்ணிக்கையில் கார்களை வாங்க விரும்புவர் என்பதை வருடா வருடம் பார்த்து வருகிறோம். இதனால், இந்த காலக்கட்டத்தில் புது, புது கார்கள் சந்தையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கார் பிராண்டில் இருந்தும் குறைந்தப்பட்சம் ஒரு புதிய கார் ஆவது அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக கார்களின் விற்பனையை அதிகரிப்பது கார் நிறுவனங்களின் நோக்கமாக உள்ளது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் புதிய கார்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த வகையில், வருகிற 2024 ஆகஸ்ட் மாதத்திலும் மாருதி சுஸுகியில் இருந்து சிட்ரோன் நிறுவனங்கள் வரையில் புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நிஸான் எக்ஸ்-டிரைல் (Nissan X-Trail): வருகிற ஆகஸ்ட் மாதத்தில் முதலாவதாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள கார் நிஸான் எக்ஸ்-டிரைல் ஆகும். 4ஆம் தலைமுறை எக்ஸ்-டிரைல் காரை நிஸான் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிஸான் எக்ஸ்-டிரைல் காரின் விபரங்கள் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டன.

டாடா கர்வ் (Tata Curvv): நிஸான் எக்ஸ்-டிரைலை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள கார் இதுவாகும். ஆனால், எக்ஸ்-டிரைலை காட்டிலும் முக்கியமான அறிமுகமாக டாடா கர்வ் பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த வருடத்திலேயே எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான கார் அறிமுகம் இதுவாகும். ஏனெனில், பிரத்யேகமாக கூபே ஸ்டைல் டிசைனில் கர்வ் காரை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி உள்ளது.

சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt): டாடா கர்வ் அறிமுகம் செய்யப்படும் அதே ஆகஸ்ட் 7ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ள மற்றொரு கார் சிட்ரோன் பசால்ட் ஆகும். கர்வ்க்கு போட்டியாக கொண்டுவரப்படும் இந்த காரும் கூபே ஸ்டைலில் தோற்றத்தை கொண்டது ஆகும். பசால்ட் கூபே எஸ்யூவி காரை பற்றிய விபரங்கள் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ளன.

மஹிந்திரா தார் ரோக்ஸ் (Mahindra Thar Roxx): மஹிந்திரா ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று புதியதாக வாகனங்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த வகையில் இந்த வருடத்திலும் அதன் தார் வாகனத்தின் 5-டோர் வெர்சனை அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது. இந்த நிலையில், தார் 5-டோர் வாகனத்தை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை தார் ரோக்ஸ் என்கிற பெயரில் மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது.

மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): கடந்த மே மாதத்தில் புதிய ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்ததை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் மாதத்தில் புதிய டிசைர் காரையும் அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. ஆனால், புதிய தலைமுறை டிசைர் காரின் அறிமுக தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 4ஆம் தலைமுறை டிசைர் காரின் அறிமுகம் ஆகஸ்ட் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.

லக்சரி கார்கள்: இந்தியாவின் நம்பர் ஒன் லக்சரி கார் நிறுவனமாக விளங்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஆகஸ்ட் 8ஆம் தேதி சி.எல்.இ கேப்ரியோலெட் மற்றும் ஜிஎல்சி 43 கூபே என இரு கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல், லம்போர்கினி நிறுவனம் புதிய உருஸ் எஸ்.இ கார் மூலமாக அதன் உருஸ் கார்களின் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரிக்கவுள்ளது. லம்போர்கினி உருஸ் எஸ்.இ காரின் அறிமுகம் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ள 5 கார்களில் 4 கார்களின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. புதிய மாருதி சுஸுகி டிசைர் காரின் அறிமுகம் மட்டுமே இன்னும் சந்தேகத்திற்கு உள்ளாக இருக்கிறது. விலையுயர்ந்த லக்சரி கார்களை பொறுத்தவரையில், சில சொகுசு கார்கள் திடீரென அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









