பொறுத்தது போதும் என பொங்கி எழுகிறது ஹோண்டா! மாருதிக்கு செக் வைக்க அந்த காரை புதிய அவதாரத்தில் களமிறக்க போகுதா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா அமேஸ் (Honda Amaze). காம்பேக்ட் செடான் (Compact Sedan) ரகத்தை சேர்ந்த இந்த கார், மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இதில், மாருதி சுஸுகி டிசையர் காரின், புதிய தலைமுறை மாடல், இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வருகைக்கு பின், ஹோண்டா அமேஸ் காருக்கு, போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஹோண்டா நிறுவனமும், வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை அமேஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது ஹோண்டா அமேஸ் காரின் 2வது தலைமுறை மாடல் ஆகும். விரைவில் விற்பனைக்கு வரவிருப்பது, மூன்றாவது தலைமுறை மாடல்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதிகளில், புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா அமேஸ் காரில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

இவற்றுடன், பல்வேறு புதிய வசதிகளை நாம் எதிர்பார்க்க முடியும். அதேபோல் டிசைனிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் செயல்திறனை பொறுத்தவரையில், இன்ஜினில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என கூறப்படுகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின்தான், புதிய தலைமுறை மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அது 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா அமேஸ் காரின் ஆரம்ப விலை 7.20 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.96 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
புதிய வசதிகள் வழங்கப்படவுள்ளதாலும், டிசைன் மெருகேற்றப்படுவதாலும், புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் விலை, இதைக்காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம். அனேகமாக 2025ம் ஆண்டின் தொடக்கத்தில், புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








