லான்ச் ஆனது 34 கிமீ மைலேஜ் தரும் கார்! அடிமாட்டு விலையில் களமிறக்கி போட்டி நிறுவனங்கள் சோலியை முடிச்சுட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த செடான் (Sedan) ரக கார்களில் ஒன்று புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் (New-gen Maruti Suzuki Dzire). ஏற்கனவே அறிவித்திருந்தபடி, நவம்பர் 11ம் தேதியான இன்று, புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிசைன், இன்ஜின், மைலேஜ், வசதிகள், போட்டியாளர்கள், பாதுகாப்பு மற்றும் விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
டிசைன் (Design): புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் முன் பகுதியில், அப்டேட் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு, ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகிய அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 15 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பின் பகுதியை பொறுத்தவரையில், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் புதிய எல்இடி டெயில்லைட்கள் போன்றவை எல்லாம் கவனம் ஈர்க்க கூடியவையாக உள்ளன. ஒட்டுமொத்தத்தில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் டிசைன், சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க கூடிய வகையில் இருக்கிறது.
இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options): புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை இரண்டுமே புதிய இஸட் சீரிஸ் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின்தான். ஆனால் பவர் அவுட்புட் வெவ்வேறானதாக இருக்கும்.

அதாவது பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 82 பிஎஸ்/112 என்எம் டார்க் ஆகும். ஆனால் சிஎன்ஜி இன்ஜின் பவர் அவுட்புட் 70 பிஎஸ்/102 என்எம் டார்க் ஆக மட்டுமே இருக்கும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. சிஎன்ஜி இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மைலேஜ் (Mileage): புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் லிட்டருக்கு 24.79 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் லிட்டருக்கு 25.71 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும். மறுபக்கம் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகள் (Features): புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் ரியர் ஏசி வெண்ட்கள், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட வசதிகளும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள் (Rivals): ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura), டாடா டிகோர் (Tata Tigor) மற்றும் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் பெரும் சவாலாக இருக்க போகிறது. இதில், ஹோண்டா அமேஸ் காரின் புதிய தலைமுறை மாடல், வரும் டிசம்பர் 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு (Safety): குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய முதல் மற்றும் ஒரே மாருதி சுஸுகி கார் புதிய தலைமுறை டிசையர்தான்!
வேரியண்ட்கள் (Variants) மற்றும் கலர் ஆப்ஷன்கள் (Colour Options): LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என மொத்தம் 4 வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்கும். சிகப்பு, நீலம், ப்ரவுன், கருப்பு, வெள்ளை, க்ரே மற்றும் சில்வர் 7 கலர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படும்.
விலை (Price): புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.79 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 10.14 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. இவை அறிமுக சலுகை விலை மட்டுமே. அதாவது நடப்பு 2024ம் ஆண்டின் இறுதி வரை மட்டுமே புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் இந்த விலையில் விற்பனை செய்யப்படும். அதன் பிறகு விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
முன்பதிவு (Bookings): புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரை புக்கிங் செய்து கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கவர்ச்சிகரமான டிசைன், போதுமான வசதிகள், சிறப்பான மைலேஜ் மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த காருக்கு, மாருதி சுஸுகி நிறுவனம் சரியான விலையை நிர்ணயம் செய்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்று புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரை கூற முடியும்.


Click it and Unblock the Notifications









