மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்தாலும், இன்னமும் வாடிக்கையாளர்கள் மத்தியில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அதன் பிரபலத்தை இழக்கவில்லை.
மாருதி சுஸுகி நிறுவனம் சீரான இடைவெளிகளில் ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து கொண்டே வருவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை (New Generation) மாடல், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவது, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 3வது தலைமுறை மாடல் ஆகும். விரைவில் விற்பனைக்கு வரவிருப்பது, 4வது தலைமுறை மாடல். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், அனேகமாக மே முதல் வாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னதாக புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஆகும். இந்தியாவில் உள்ள ஒரு சில மாருதி சுஸுகி டீலர்ஷிப்கள் மட்டும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளன.
விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் தற்போதைய நிலையில், LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரும் இதே 4 வேரியண்ட்களில்தான் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், வெள்ளை, சிகப்பு, நீலம், கருப்பு, ஆரஞ்ச் மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பகுதியில் புத்தம் புதிய பம்பர்கள், புதிய க்ரில், 'L' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.
இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 1.2 லிட்டர் K12C பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் இதே இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுமா? அல்லது சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் புதிய தலைமுறை மாடலில் வழங்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜின் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
எப்படியாயினும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவுள்ள இன்ஜின் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. அத்துடன் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது கூடுதல் சிறப்பு. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி இன்ஜின் தற்போதே ஒரு கிலோவிற்கு 30.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 5.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆனால் டிசைனில் மாற்றங்கள் செய்யப்படுவதாலும், பல்வேறு புதிய அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படுவதாலும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை, இதை விட சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இன்னும் ஒரு சில வாரங்களில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை எவ்வளவு? என்பது நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications








