புதுசா பைக் வாங்க போறீங்களா.. கொஞ்சம் காத்திருங்க.. பைக் மாதிரி மைலேஜ் தரும் மாருதி கார் 2மாசத்துல அறிமுகமா!!
ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் இருக்கின்றது. இந்தியர்களின் ஃபேவரிட்டான இந்த ஹேட்ச்பேக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் மிகப் பெரிய அளவில் மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது, அதி நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றை தாங்கியதாக இந்த காரை சுஸுகி தயார் செய்திருக்கின்றது.
இதனால்தான் இந்த புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் வருகை எப்போது அரங்கேறுமோ என பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே அடுத்த இரண்டு மாதங்களில் இந்த காரின் இந்திய அறிமுகம் அரங்கேறிவிடும் என்கிற மகிழ்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவலை காடிவாடி-யும் அதன் தளத்தில் வெளியிட்டு இருக்கின்றது.

அந்த தகவலில் அடுத்த இரண்டு மாதங்களில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்றும் அது தெரிவித்து இருக்கின்றது. மேலும், இந்த காரின் உற்பத்தி பணிகள் அடுத்த ஓரிரு வாரங்களில் இந்தியாவில் தொடங்கப்பட இருப்பதாகவும் அது தகவல் வெளியிட்டு உள்ளது.
புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் மாடலைத்தொடர்ந்து, டிசையர் கார் மாடலும் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023-லேயே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாருதி வெளியீடு செய்தது. இதைத்தொடர்ந்து, முதல் நாடாக ஜப்பானில் அதை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையிலேயே தற்போது இந்தியாவிலும் அக்காரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மாருதி களமிறங்கி இருக்கின்றது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்டைக் காட்டிலும் பலமடங்கு கவர்ச்சியானதாகவும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், புதிய தேன் கூடு போன்ற க்ரில், புதிய அலாய் வீல்கள், அப்டேட் செய்யப்பட்ட பனி மின் விளக்கு, மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டெயில் லைட்டுகள் என ஏகப்பட்டவற்றை அவை தாங்கி இருக்கின்றன.
தொடர்ந்து, இந்த காரின் பின் பக்க கதவின் கைப் பிடிகள் பழைய நிலைக்கே திருப்பிக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் அது மேல் பக்கத்கத்தில் பிள்ளர் அருகில் இருக்கும். இதேபோல், உட்பக்கத்திலும் சொல்லும்படியான பல அப்டேட்டுகளை சுஸுகி வழங்கி இருக்கின்றது.
இதன் விளைவாக கூடுதல் பிரீமியம் லுக்கிற்கு அந்த கார் அப்கிரேட் ஆகி இருக்கின்றது. அந்தவகையில், மிதக்கின்ற அமைப்பில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டு இருப்பது அந்த காரின் கேபினுக்கு மிக சிறப்பான லுக்கை வழங்கி இருக்கின்றது.
இத்துடன், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், பன்முக ஏர் பேக்குகள், நடுத்தர டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன்முக கனட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் போன்ற இன்றைய கார் காதலர்கள் விரும்பும் அம்சங்கள் பலவும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடனேயே, மிக முக்கியமான அம்சமாக ஹைபிரிட் அம்சத்தை இந்த காரில் சுஸுகி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவே முன்னணி பிரீமியம் தர பைக்குகளுக்கு இணையான மைலேஜை வழங்கக் கூடியதாக புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாற்றி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், இசட் சீரிஸ் பெட்ரோல் மோட்டார், மைல்டு ஹைபிரிட் அம்சத்துடன் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றன. இந்த பெட்ரோல் மோட்டார் மற்றும் ஹைபிரிட் அம்சம் ஆகியவை இணைந்தே புதிய ஸ்விஃப்டை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்றி இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், அது எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்கிற துள்ளியமான விபரம் வெளியாகவில்லை. அதேவேளையில், அது 30 கிமீ முதல் 35 கிமீ வரையில் ஒரு லிட்டருக்கு மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதால் புதிய ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்த பின்னரே அது என்ன மாதிரியான மைலேஜை வழங்கும் என்பது தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்விஃப்ட் காருக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டை இரட்டிப்பாக்க புதிய தலைமுறையின் வருகை பெருமளவில் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. அதேவேளையில், இப்போதே இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








