பக்கத்து வீடு, எதிர் வீடு என மூன்று குடும்பம்கூட இந்த காருல போகலாம்! மீண்டும் இந்தியா வருகிறது கார்னிவல்!!
கியா (Kia) நிறுவனம், அதன் கார்னிவல் (Carnival) கார் மாடலை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக சமீப சில காலமாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே கார்னிவல் கார் மாடலின் மறு அறிமுகம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரங்கேற இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கியா கார்னிவல் ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி (Luxury MPV) ரக கார் மாடல் ஆகும். சமீபத்திலேயே இதனை அப்டேட் செய்து உலக சந்தையில் கியா விற்பனைக்குக் கொண்டு வந்தது.
இதையே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்தியா ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-வில் கேஏ4 (KA4) எனும் கான்செப்ட் கார் மாடல் கியா சார்பில் காட்சிப்படுத்தப்பட்டதே நினைவிருக்கின்றதா... இதையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. முதல் கட்டமாக இந்த சொகுசு எம்பிவி ரக காரை முழுமையாக கட்டப்பட்ட யூனிட் (CBU)-ஆகவே நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே இந்த காரின் உற்பத்தி உள்ளூர் மயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அடுத்த ஆண்டு இந்த காரை உள்ளூரிலேயே உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சொகுசு எம்பிவி காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, கோடியில் புரளும் திரைப் பிரபலங்கள் பலர் இந்த காரின் உரிமையாளர்களாக நாட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு கார்னிவலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதால் இந்த காரின் விலை நம்ப முடியாத அளவிற்கு மிக அதிகமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
60 லட்ச ரூபாய்க்கும் அதிகமாகவே இதன் விலை இருக்கும் என கூறப்படுகின்றது. அதேவேளையில், இது அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவான விலையே என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய கியா கார்னிவல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனில் டொயோட்டா வெல்ஃபையருக்கு மிகப் பெரிய போட்டியாக விளங்கும்.
இந்த கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 1.22 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எம்பிவி ரக காராக டொயோட்டா வெல்ஃபையர் காட்சியளிக்கின்றது. இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர காருக்கே போட்டியளிக்கும் நோக்கில் வரும் அக்டோபர் மாதத்தில் புதிய கார்னிவல் வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக சந்தையில் கியா கார்னிவல் கார் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 3.5 லிட்டர் வி6 பெட்ரோல், 1.6 லிட்டர் பெட்ரோல்-ஹைபிரிட் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களிலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இதில் இந்தியாவில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினே விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், ஹைபிரிட் அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனிலும் கியா கார்னிவல் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, பன்முக இருக்கைகள் தேர்விலும் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
7, 9 மற்றும் 11 இருக்கைகள் தேர்விலேயே கியா கார்னிவல் எம்பிவி எதிர்பார்க்கப்படுகின்றது. 7 இருக்கை என்றாலே ரெண்டு குடும்பம் தாராளமாக போகலாம். இதில், 11 இருக்கைகள் என்றால் இரண்டு என்ன மூன்று குடும்பங்கள்கூட ஒன்றாக அமர்ந்து பயணிக்கலாம். அந்த அளவிற்கு மிகுந்த தாராளமான இட வசதிக் கொண்ட காராகவே கியா கார்னிவல் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
இதேபோல், சிறப்பம்சங்களிலும் இந்த கார் மிக சிறந்ததாகவே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 12.3 அங்குல திரை, முன் மற்றும் பின் பக்கங்களில் டேஷ் கேமிரா, ஹெட்-அப் திரை, டிஜிட்டல் ரியர் வியூ மிர்ரர், அப்டேட் செய்யப்பட் டிஜிட்டல் சாவி, ஆம்பியன்ட் லைட் என ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கியா கார்னிவல் மேலே பார்த்ததுபோன்று இன்னும் பல பிரீமியம் மற்றும் சொகுசு அம்சங்களைத் தாங்கிய எம்பிவி காராகவே இந்தியாவைக் களம் காண இருக்கின்றது. இதுதவிர, அப்டேட்டின்கீழ் இந்த காரின் தோற்றத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதனால் கூடுதல் கவர்ச்சியான காராகவும் கார்னிவல் மாறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








