வெறும் 7 லட்ச ரூபாயில் கிடைக்கும் கார் என சொன்னால் நம்பவே முடியல! மாருதி சுஸுகியின் மற்றுமொரு சிக்ஸர்!!
மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire), மிடில்-கிளாஸ் மக்களின் பிரதானமான பட்ஜெட் விலை கொண்ட கார். மேம்படுத்தப்பட்ட புதிய டிசைர் கார் சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிசைர் காரில் பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், க்ளோபல் என்சிஏபி-இல் இந்த கார் 5க்கு முழு 5 நட்சத்திரங்களை பெற்று அனைவரையும் ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இந்த காரின் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
புதிய மாருதி சுஸுகி டிசைர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் புதிய டிசைர் காரின் எல்.எக்ஸ்.ஐ (LXI) வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும். இந்த விலை குறைவான டிசைர் வேரியண்ட்டில் என்னென்ன அம்சங்கள் கிடைக்கும் என்பதை விவரிக்கும் விதமாகவே தற்போது ஒரு வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.

விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், ஏகப்பட்ட வசதிகளையும், சவுகரியமான அம்சங்களையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. காரின் சாவியில் இருந்து ஆரம்பிப்போம். சாதாரணமான சாவிக்கு பதிலாக, ரிமோட் லாக்கிங் சாவியை புதிய டிசைர் எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டில் பெறலாம். காரின் முன்பக்கத்தில் புரோஜெக்டர் ஹெட்லைட்களுக்கு உள்ளே மஞ்சள் நிறத்திலான ஹலோஜன் பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
மற்றப்படி, ஃபாக் விளக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல், இந்த காரின் முன்பக்கத்தில் காட்சியளிக்கும் கருப்பு நிற பேனல்கள் அனைத்தும் டிசைரின் டாப் வேரியண்ட்களில் பளபளக்கும் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன. வெளிப்பக்க கதவு கைப்பிடிகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் அனைத்தும் காரில் இருந்து தனியாக தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. டாப்-வேரியண்ட்களில் இவை காரின் உடல் நிறத்தில் கிடைக்கும்.

டர்ன் இண்டிகேட்டர்கள் ORVM-களில் இல்லாமல், அவற்றிற்கு கீழே ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன. காரின் முன்பக்க கிரில், சைடு விண்டோ லைன் மற்றும் பின்பக்க கதவு உள்ளிட்ட பகுதிகளில் காருக்கு காஸ்ட்லீயான லுக்கை தரும் க்ரோம்கள் இல்லை. இதற்கு பதிலாக கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காருக்கு பின்பக்கத்தில் ஸ்மோக்டு எஃபெக்ட் உடன் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டு இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், காருக்கு பின்பக்க டீஃபாக்கர், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா உள்ளிட்டவற்றையும் இந்த டிசைர் காரில் பார்க்க முடிகிறது. இத்தனை வழங்கப்பட்டு இருப்பினும், இது விலை குறைவான பேஸ் வேரியண்ட் என்பதை காரின் சக்கரங்கள் காட்டிக் கொடுக்கின்றன. ஏனெனில், இந்த காரில் அலாய் சக்கரங்களுக்கு பதிலாக இரும்பு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சக்கரங்களின் அளவு 1-இன்ச் குறைக்கப்பட்டு 14-இன்ச் ஆக உள்ளது.

காருக்கு உள்ளே ஓட்டுனர் இருக்கையில் உயரத்தை அட்ஜெஸ் செய்யும் வசதியும், ஸ்டேரிங் சக்கரத்தில் எந்தவொரு கண்ட்ரோல்களும் இல்லை. ஸ்டேரிங்கில் கண்ட்ரோல்கள் இல்லாததற்கு காரணம், இந்த காரில் மியுசிங் சிஸ்டம் இல்லை. க்ளைமேட் கண்ட்ரோல் பேனல் ஆட்டோமேட்டிக் போல் தெரிந்தாலும், அது மேனுவலாக செயல்படக்கூடியதாகும். அதாவது, நாமாக தான் காருக்குள் க்ளைமேட்டை கண்ட்ரோல் செய்ய வேண்டும்.
க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 மதிப்பெண்களை பெற்ற புதிய டிசைர் காரில் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சமாக 6 ஏர்பேக்குகளை பெறலாம். ஒவ்வொரு இருக்கை வரிசைக்கும் என தனித்தனியாக விளக்குகள் கொடுக்கப்படவில்லை. டிரைவருக்கு தேவையான தகவல்களை வழங்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் செமி-டிஜிட்டல் தரத்தில் உள்ளது. அனைத்து ஜன்னல் கண்ணாடிகளையும் தேவைக்கேற்ப அட்ஜெஸ் செய்துக் கொள்ளலாம் என்றாலும், பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளை மேனுவலாகவே அட்ஜெஸ் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு நேரம் நாம் பார்த்தவை அனைத்தும் விலை குறைவான புதிய மாருதி சுஸுகி டிசைர் காரில் வழங்கப்படுபவை ஆகும். அதாவது, ரூ.6.79 லட்சத்தில் கிடைக்கும் டிசைர் காரில் இந்த வசதிகளை பெறலாம். புதிய டிசைர் காரை எப்படியாவது குறைந்த விலையில் வாங்க நினைப்பவர்கள் இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை ஆராய்ந்து பார்த்த பின் காரை புக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications









