25கிமீ மைலேஜ் தரும் புதிய ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்தாச்சு.. பாதுகாப்பு தருவதில் டாடா காருக்கே டஃப் கொடுக்கும்!
இந்தியர்களின் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பான புதிய ஸ்விஃப்ட் (Swift) கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிகப் பெரிய அளவில் இந்த காரில் மாற்றங்களைச் செய்திருக்கின்றது. குறிப்பாக, இன்றைய தலைமுறையினர்களுக்கு ஏற்ற அம்சங்கள் பலவற்றைத் தாங்கியதாக இந்த காரை அது தயார் செய்திருக்கின்றது.
புதிய ஸ்விஃப்ட் காருக்கு அறிமுகமாக ரூ. 6.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதிகபட்சமாக 9.64 லட்சம் ரூபாய் வரையில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த காரை மாத சந்தா திட்டத்தின் கீழும் வாங்கிக் கொள்ள முடியும். ரூ. 17,436 இல் இருந்து மாத சந்தா திட்டம் தொடங்குகின்றது. மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் ஆகிய இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இந்த காரில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய ஸ்விஃப்டை ஆறு விதமான ஒற்றை நிற தேர்வுகளிலும், மூன்று விதமான டூயல் டோன் நிற தேர்வுகளிலும் வாங்கிக் கொள்ள முடியும்.
இப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பது நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஆகும். விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஸ்விஃப்ட், பழைய மாடலைக் காட்டிலும் அதிகம் மைலேஜை வழங்கும் இதன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட தேர்வு 10 சதவீதம் அதிகம் மைலேஜையும், ஏஎம்டி கொண்ட தேர்வு 14 சதவீதம் வரை அதிகம் மைலேஜை வழங்கும்.

புதிய ஸ்விஃப்ட் காரில் புதிய இசட் சீரிஸ் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதுவே அதிக மைலேஜுக்கு காரணமாக உள்ளது. 1.2 லிட்டர் இசட் 12 இ மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 25.75 கிமீ வரையில் ஒரு பெட்ரோலுக்கு மைலேஜை வழங்கும்.
புதிய ஸ்விஃப்ட் அதிக மைலேஜை தரக் கூடிய கார் மட்டுமல்ல அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதும் கூட. குறிப்பாக, இதில் ஒயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர இந்த காரின் இன்னும் பல சிறப்பம்சங்களும், பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், 3 பாயிண்டுகள் கொண்ட சீட் பெல்ட் (ரிமைண்டர் வசதியுடன்), எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கனட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பிரேக் அசிஸ்ட் அம்சம் உள்ளிட்டவையும் புதிய ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், புதிய ஸ்விஃப்ட் பாதுகாப்பு விஷயத்தில் நல்ல ரேட்டிங்கைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே ஜப்பானுக்கான ஸ்விஃப்ட் ஜப்பான் என்சிஏபி-யில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நவீன கால தொழில்நுட்ப அம்சங்களாக இந்த காரில் 9 அங்குல ஸ்மார்ட் ப்ளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர சுஸுகி கார் இணைப்பு வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் 60 kW பவரை, அதாவது, 81.58 பிஎஸ் பவரையும், 111.7 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மாருதி சுஸுகி அரேனா ஷோரூம் வாயிலாகவே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு நல்ல வரவேற்பு இப்போதும் உண்டு. ஆனால், கடும் போட்டி காரணமாக இதற்கு கிடைத்து வந்த விற்பனை லேசாக பின் தங்கிக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே புதிய தலைமுறை ஸ்பிஃப்டை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது சுஸுகி. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









