2024 மாருதி ஸ்விஃப்ட்டை விட கம்மியான விலையில் கிடைக்கும் ஹூண்டாய் கார்!! எதை வாங்குவது என்று குழப்பமா?
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் மேம்படுத்தப்பட்ட நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரை சில தினங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விற்பனையில் இந்த மாருதி ஹேட்ச்பேக் காருக்கு ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் நேரடி போட்டி மாடலாக விளங்குகிறது. இந்த விலை குறைவான மாருதி மற்றும் ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெளிப்பக்க தோற்றம்: மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் முன் மற்றும் பின்பக்கத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, C-வடிவ ஹெட்லைட் மூலமாக ஸ்விஃப்ட் காரின் பின்பக்க டிசைன் மெருக்கேற்றப்பட்டுள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பொறுத்தவரையில், இது ஐரோப்பிய டிசைனை கொண்டுள்ளது. இந்த காரை ஹூண்டாய் கடந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்தது.

இருப்பினும், புதிய ஸ்விஃப்ட் காருடன் ஒப்பிட்டால், கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் தோற்றம் நிறைய பேரை கவராமல் போகலாம். கிராண்ட் ஐ10 நியோஸின் ஹெட்லைட்ஸ் & டெயில்லைட்ஸின் டிசைன் அருமையானதாக உள்ளது. இருப்பினும், விலை குறைவான கார் என்பது இந்த ஹூண்டாய் காரின் தோற்றத்தை பார்த்தாலே தெரியும். ஸ்விஃப்ட்டை விட கிராண்ட் ஐ10 நியோஸ் உயரமானது ஆகும்.
உட்பக்க தோற்றம்: நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரின் உட்பக்க கேபினின் தோற்றம் முழுவதுமாக மெருக்கேற்றப்பட்டுள்ளது. மல்டி-லேயர் டிசைன் புதிய ஸ்விஃப்ட் காரின் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதிய தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு உள்ளே ட்யூயல்-டோனில் கேபின் வழங்கப்படுகிறது. இந்த ஹூண்டாய் காரின் டேஸ்போர்டின் மத்தியில் 8 இன்ச்சில் திரை கொடுக்கப்படுகிறது.

புதிய ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்திற்கு முன்பு வரையில், அழகான கேபினை கொண்ட கார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஹூண்டாய் ஐ10 நியோஸை சொல்லலாம். ஏனெனில், பழைய ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரின் கேபினின் தோற்றம் கொஞ்சம் மலிவானதாக இருந்தது. ஆனால், புதிய ஸ்விஃப்ட் காரின் கேபின் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டேஸ்போர்டின் டிசைன் கஸ்டமர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.
என்ஜின் சிஸ்டம்: புதிய ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரில் மிக முக்கிய அப்டேட்டாக பழைய 1.2 லிட்டர் கே-சீரிஸ் என்ஜின் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய 1.2 லிட்டர் இசட்-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ காரிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஸ்விஃப்ட் காரில் முன்பு 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய ஸ்விஃப்ட் காரில் 3-சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் இப்போதும் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. 4-சிலிண்டர் என்ஜின்கள் காருக்கு கொஞ்சம் அதிக ஆற்றலை வழங்கும். இருப்பினும், இன்னமும் நாங்கள் புதிய ஸ்விஃப்ட் காரை ஓட்டி பார்க்கவில்லை.
விலை: 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ரூ.6.49 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆரம்ப விலையே ஆகும். அதிகப்பட்சமாக ரூ.9.65 லட்சம் வரையில் 2024 ஸ்விஃப்ட் காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விலைகள் ரூ.5.92 லட்சத்தில் இருந்து ரூ.8.56 லட்சம் வரையில் உள்ளன. இவை யாவும், இந்த கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, ஹூண்டாய் கார்கள் கொஞ்சம் விலை உயர்ந்தவை என்கிற எண்ணம் நம் இந்திய மக்களிடத்தில் உள்ளது. அதற்கேற்ப ஹூண்டாய் கார்களின் டிசைன், தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் என்ஜின் மேம்பட்டதாக இருக்கும். ஆனால், கிராண்ட் ஐ10 நியோஸின் விலை ஸ்விஃப்ட்டை காட்டிலும் குறைவாக உள்ளதால், இந்த காரின் தரம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications









