சென்னையில் யாருக்கும் தெரியாமல் சுற்றி திரிந்த புது ஜப்பான்-ஸ்டைல் கார்!! ரோடு டெஸ்ட்டிங் எல்லாம் ஓகே தான்...
நிஸான் மேக்னைட் (Nissan Magnite) கார் விரைவில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதல்முறையாக பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி பார்க்கலாம்.
ஜப்பானிய கார் நிறுவனமான நிஸான் இந்தியாவில் ஓர் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக தன்னை காட்டிக் கொள்ள கடந்த பல வருடங்களாகவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கடந்த சில வருடங்களாக தான் நிஸான் கார்கள் விற்பனை ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என சொல்ல வேண்டும்.

குறிப்பாக, 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் கார் இந்தியாவில் நிஸான் நிறுவனத்துக்கு 2வது இன்னிங்ஸை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அத்தகைய காரை தான் விரைவில் நிஸான் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்ய உள்ளது. 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு, கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு நிஸான் மேக்னைட் கார் பெரிய அளவிலான அப்டேட்டை பெறவுள்ளது.
இதன் காரணமாகவே, புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில்தான், சென்னையில் புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் ரோடு டெஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் இப்போதுதான் முதல்முறையாக ரோடு டெஸ்ட்டிங்கின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களில் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது. காரின் எந்தவொரு பாகத்தையும் தெளிவாக காண முடியவில்லை. அலாய் சக்கரங்களின் டிசைன் கூட யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காரின் பின்பக்க டெயில் லைட்களின் டிசைனை வைத்து இது மேக்னைட் கார் என்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது.
புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன டிசைன் மாற்றங்களை நிஸான் கொண்டுவரவுள்ளது என்பதை இந்த படங்களை வைத்து நம்மால் அறிய முடியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், காரின் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் வழங்கப்படுகின்ற பம்பர்களின் டிசைன் திருத்தப்படலாம். அதாவது, மேக்னைட்டில் இப்போது இருக்கும் பம்பர்களை காட்டிலும் புதுமையான பம்பர்கள் புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் பொருத்தப்படும்.

அதேபோல், காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் வழங்கப்படும் விளக்குகளின் வடிவங்களிலும் நிச்சயமாக அப்டேட்கள் இருக்கும். குறிப்பாக, ஹெட்லைட்கள் இப்போது இருப்பதை காட்டிலும் மெல்லியதான டிசைனில் கொடுக்கப்படலாம். அதேபோல், காரின் உட்பக்கத்திலும் சிறு, சிறு அப்டேட்களை எதிர்பார்க்கலாம். மற்றப்படி, மேக்னைட்டின் என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
நிஸான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்சமயம் இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 70 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறன் வரையிலும், டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 98 பிஎச்பி மற்றும் 152 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்குவதினால் நிஸான் மேக்னைட் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் புதிய மேக்னைட் கார் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Image Courtesy: We Guide Auto


Click it and Unblock the Notifications









