டாடாவில் இருந்து பென்ஸ் வரைக்கும் இந்தியாவை குறி வெச்சிட்டாங்க... தீபாவளிக்கு இதில் ஒரு காரை வாங்கி போடுங்க!!
இந்தியாவின் முக்கியமான தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களினால், வருட இறுதி மாதங்களில் தான் அதிகளவில் புது, புது எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், வருகிற செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கவர்ச்சிக்கரமான கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள், சிலவற்றை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். இதில் சில கார்களை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால், இந்த தொகுப்பில் நாம் பார்க்கவுள்ள கார்கள் அனைத்திற்கும் புக்கிங்குகள் வருகிற செப்டம்பரில் இருந்துதான் துவங்கப்பட உள்ளன.
1. டாடா கர்வ் (Tata Curvv ICE): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கர்வ் காரை பற்றிய விபரங்கள் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், வருகிற செப்டம்பர் 2ஆம் தேதியில் காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. டாடா கர்வ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.10 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம்.

1.2 லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் என மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கர்வ் விற்பனை செய்யப்பட உள்ளது. இவற்றுடன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் பெரும்பாலான அம்சங்களை கர்வ் காரிலும் எதிர்பார்க்கலாம்.
2. ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Alcazar Facelift): வருகிற செப்டம்பர் 9ஆம் தேதியில் ஹூண்டாய் நிறுவனம் அதன் அல்கஸார் காரை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்ய உள்ளது. புதிய அல்கஸாரின் வெளிப்பக்க மற்றும் உட்பக்க தோற்றம், காருக்கு வழங்கப்பட உள்ள கலர் ஆப்ஷன்கள் மற்றும் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் குறித்த விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக விளங்கும் ஹூண்டாய் கிரெட்டாவின் 7-சீட்டர் வெர்சனாக அல்கஸார் விற்பனை செய்யப்படுகிறது. கிரெட்டா இந்த ஆண்டு துவக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட்ட நிலையில், விரைவில் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால், கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவைகளாக இருக்கும்.
3. எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV): சீனாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் வுல்லிங் க்ளவுட் இவி எலக்ட்ரிக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எம்ஜி மோட்டாரின் புதிய எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி செப்டம்பர் 11ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ப அதிக கிரவுண்ட் க்ளியரென்ஸ் உடன் உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் ஏறக்குறைய 500கிமீ ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

4. டாடா நெக்ஸான் சிஎன்ஜி (Tata Nexon CNG): மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றான டாடா நெக்ஸானில் புதியதாக சிஎன்ஜி பவர்டிரெயின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் வேறெந்த சிஎன்ஜி காரிலும் இல்லாத ஸ்பெஷலாக டர்போ என்ஜினை கொண்ட சிஎன்ஜி காராக புதிய நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த டாடா சிஎன்ஜி கார் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

5. மெர்சிடிஸ் மேபக் இக்யூஎஸ்680 (Mercedes Maybach EQS680): இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்குவர உள்ள புதிய லக்சரி கார் இதுவாகும். செப்டம்பர் 5ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய பென்ஸ் காரில் 108.4kWh என்கிற பெரிய அளவிலான என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 600கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய இந்த கார், உலகின் அதிக ரேஞ்ச் வழங்கக்கூடிய எலக்ட்ரிக் காராக விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாதத்திற்கு மாதம் இந்தியாவின் கார்கள் மார்க்கெட் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 5 கார்களும் நிச்சயமாக வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில், சில கார்களின் அறிமுகங்கள் தள்ளிப் போகலாம். அதேநேரம், இந்த தொகுப்பில் குறிப்பிடப்படாத கார் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









