நீ பேசாம ஜப்பானுக்கே போய்டு சிவாஜி... தட்டுத்தடுமாறி நிஸான் செய்த சாதனை!!
நிஸான் (Nissan), உலகளவில் பிரபலமான ஜப்பானிய கார் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. ஆனால், இந்திய மார்க்கெட்டில் மட்டும் கார்கள் விற்பனையில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேக்னைட் என்கிற தரமான எஸ்யூவி காரை அறிமுகம் செய்தாலும், அதன்பின் நிஸானில் இருந்து அதுபோன்று வேறெந்த காரும் வரவில்லை என்பதுதான் உண்மை. இருப்பினும், தற்போது இந்தியாவில் கார்கள் விற்பனையில் புதிய சாதனையை நிஸான் செய்துள்ளது. அது என்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரையில், விலை குறைவான கார்களுக்கே நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனை புரிந்துக் கொண்டு கார்களை விற்பனைக்கு கொண்டுவந்த நிறுவனங்களே நம் நாட்டு மார்க்கெட்டில் வெற்றி பெற்றுள்ளன. மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற லக்சரி கார் நிறுவனங்களும் நம் நாட்டில் வெற்றியை கண்டுள்ளன; ஆனால் அது எல்லாம் வேற கதை.

குறைவான விலையில் காரை விற்பனைக்கு கொண்டுவர வேண்டுமெனில், அந்த காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். நிஸான் நிறுவனமும் தனது கார்களை இந்தியாவில் தான் உற்பத்தி செய்கிறது. என்றாலும், மாதத்திற்கு 5 ஆயிரம் கார்களை கூட இந்த ஜப்பானிய நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனை செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது.
ஏற்கனவே கூறியதுபோல், கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் கார் மட்டுமே சமீப காலத்தில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற நிஸான் கார் ஆகும். புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.5.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மேக்னைட் காரின் வெற்றியின் மூலம், தட்டுத்தடுமாறி ஒருவழியாக இந்தியாவில் கார்கள் விற்பனையில் பிரம்மாண்ட மைல்கல்லை நிஸான் கடந்துள்ளது.

அதுதான், 5 லட்ச கார்கள் விற்பனை ஆகும். அதாவது, ஆரம்பத்தில் இருந்து இதுவரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட நிஸான் கார்களின் மொத்த எண்ணிக்கை வெற்றிக்கரமாக 5 லட்சத்தை கடந்துள்ளது. நிஸான் நிறுவனம் இந்தியாவில் 2005ஆம் ஆண்டில் நுழைந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்பனை செய்ய நிஸான் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 20 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு ஆண்டில் 25 ஆயிரம் நிஸான் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிரபலமான மாருதி கார் ஒன்று, ஒரே மாதத்தில் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிஸான் கார்கள் விற்பனை பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், இந்தியாவில் நிஸானின் வணிகம் ஓரளவிற்கு சிறப்பாகவே உள்ளது.

இதற்கு காரணம், இந்தியாவை நிஸான் நிறுவனம் கார் உற்பத்தி மையமாகவே பார்க்கிறது. அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முக்கால்வாசி நிஸான் கார்கள் வெளிநாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏனெனில், நம் நாட்டில் கார்கள் உற்பத்தி செலவும், போக்குவரத்து செலவும் மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
கடந்த நவம்பர் மாதத்தில் கூட, மொத்தம் 9 ஆயிரத்து 40 கார்களை நிஸான் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் இதில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை 2 ஆயிரத்து 342 மட்டுமே ஆகும். இந்தியாவில் தற்போதைக்கு மேக்னைட் மற்றும் எக்ஸ்-டிரைல் என இரு கார்களை மட்டுமே நிஸான் விற்பனை செய்கிறது. இதில் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,342 கார்கள் அனைத்தும் மேக்னைட் ஆகும். அதாவது, கடந்த மாதத்தில் ஒரு எக்ஸ்-டிரைல் கார் கூட இந்தியாவில் விற்பனையாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் மட்டுமல்ல, ரெனால்ட், ஹோண்டா உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்கள் கூட இந்தியாவை ஓர் கார் உற்பத்தி மையமாகவே பார்க்கின்றன. இந்தியாவில் நிஸான் மேக்னைட் காருக்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைப்பது உண்மைதான். ஆனால், அதற்காக மேக்னைட் காரை மட்டும் விற்பனை செய்வது எந்த விதத்தில் சரியானதாக இருக்கும்...?


Click it and Unblock the Notifications









