ஹோண்டா - நிஸான் - மிட்சுபிஷி நிறுவனங்கள் கை கோர்க்க போகுதா! ஒட்டுமொத்த வாகன உலகமும் மிரண்டு போய் நிக்குது!
ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மூன்று முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விரைவில் ஒன்றிணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹோண்டா (Honda), நிஸான் (Nissan) மற்றும் மிட்சுபிஷி (Mitsubishi), இந்த மூன்று நிறுவனங்களே ஒன்றிணைவதற்கான முயற்சியில் களமிறங்கி இருக்கின்றன. அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்கும் பொருட்டே இந்த கூட்டணி தொடங்கப்பட இருக்கின்றது. இந்த மூன்று நிறுவனங்களும் நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களாக அறியப்படுகின்றன. உலக சந்தையில் இவர்களின் ஆதிக்கமும் மிகப் பெரிய அளவில் காணப்படுகின்றது.
இந்த நிலையிலேயே மிகப் பெரிய சந்தையை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவர்கள் மூவரும் ஒன்றாக இணைய இருக்கின்றனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டும் நிலையில் இருப்பதாகவும், விரைவில் மூன்று நிறுவனங்களும் இணைவிற்கான ஒப்புதல் பத்திரத்தில் கையொப்பமிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக ஹோண்டா மற்றும் நிஸான் இவர்கள் இருவர் மட்டுமே இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையிலேயே புதிதாக இவர்களின் கூட்டணியில் மிட்சுபிஷி-யும் இணைய இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவே போட்டி நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியிருக்கின்றது. மேலும், இவர்கள் மூவரும் இணைந்து செயல்பட இருக்கின்றனரா இல்லையா என்பது பற்றிய விபரம் விரைவிலேயே வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஜனவரி 2025க்குள் இந்த கூட்டணியில் தன்னுடைய பங்களிப்பு இருக்குமா, இல்லையா என்பது பற்றிய இறுதி கட்ட முடிவை எட்ட மிட்சுபிஷி திட்டமிட்டு இருக்கின்றது.
முன்னணி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இவர்கள் மூவரும் தற்போது ஒன்றாக இணைய இருக்கின்றனர். இது வழக்கமாக நடைபெறும் கூட்டணி நிகழ்வைப் போன்று இருக்காது என தெரிகின்றது. மூவரும் ஒரு நிறுவனத்தை போல இணைந்து செயல்படுவதற்கான இணைவாகவே இந்த இணைவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகையால், மூன்று நிறுவனங்களும் ஒன்றான பின்னர் ஓர் புதிய பெயர் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அல்லது மூவரும் சேர்ந்து புதிய பிராண்டை உருவாக்கி அதன்கீழ் புதிதாக வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அனைத்து தகவலும் 2025 மத்திக்குள் அல்லது இறுதிக்குள் உறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக அளவில் மிகப் பெரிய சந்தையை மூன்று நிறுவனங்களும் உருவாக்கி வைத்திருக்கின்றன. இந்த மார்க்கெட்டையே இவர்கள் மேலும் விரிவாக்கம் செய்யவுள்ளனர். தொடர்ந்து, 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவர்கள் முதலீடு செய்யலாம் எனவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாபெரும் முதலீட்டு தொகையை வைத்து இந்த பிராண்டுகள் மின்சார கார், ஹைபிரிட் கார் மற்றும் பிளக் இன் ஹைபிரிட் ஆகிய கார்களை உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மார்க்கெட்டில் இந்த வகை வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சீன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த தேவையை இவர்கள் பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவில் மட்டுமல்ல இந்தியா மற்றும் பிற உலக நாடுகளிலும் மின்சார வாகனங்களுக்கான தேவை தொடர்ச்சியாக உயர்ந்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, ஐசிஇ வாகனங்களையும் இவர்கள் உற்பத்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, தங்களுக்கு ஏற்படும் உற்பத்தி செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் இவர்களின் இணைவிற்கான முக்கிய நோக்கமாக உள்ளது. தொடர்ந்து, இந்த கூட்டணி எதிர்காலத்திற்கான தரமான வாகனங்களை உற்பத்தி செய்வதோடு, வாகனங்களின் இயக்கத்தை சுவாரஷ்யமாக மாற்றக் கூடிய மென்பொருளை உருவாக்குவதும் இவர்களின் இணைவின் மற்றுமொரு மிகப் பெரிய நோக்கமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போட்டி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது விழி பிதுங்கி நிற்கின்றன. முன்னணி நிறுவனங்கள் மூன்றும் இணைந்தால் அவர்களின் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியான சூழல் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், இப்போது இருப்பதைக் காட்டிலும் மிகவும் அட்வான்ஸ்டான வாகங்களை இவர்கள் விற்பனைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் டாடா மற்றும் மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்ல உலக அளவிலான கார் உற்பத்தி நிறுவனங்களுக்கே இவர்கள் தலைவலியை ஏற்படுத்த இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








