தமிழ்நாட்ல தயாரித்த காருக்கு இப்படி ஒரு வரவேற்பா! 1000,2000இல்ல 1.1மில்லியன் யூனிட் ஏற்றுமதி பண்ணியிருக்காங்க!
நிஸான் (Nissan) நிறுவனம் இந்தியாவில் இருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் புதிய சாதனையைப் படைத்து இருப்பதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து வாகனங்களை ஏற்றுதி செய்ய தொடங்கியதில் இருந்து இதுவரை அந்நிறுவனம் 1.1 மில்லியன் யூனிட்டு வாகனங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவே தெரிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் மிகப் பெரிய சாதனை ஆகும். நிஸான் நிறுவனம் இந்த சாதனையை தமிழகத்தில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் வாயிலாகவே படைத்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலை சென்னை அடுத்துள்ள ஒரகடத்திலேயே அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆமாங்க, மேட்-இன் தமிழக தயாரிப்புகளையே அதிக அளவில் நிஸான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது. எனவே அந்நிறுவனம் செய்திருக்கும் சாதனையானது தமிழகத்திற்கும் கிடைத்திருக்கும் பெருமையாக பார்க்கப்படுகின்றது. நிஸான் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உள்நாட்டிலும் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2024 ஜூன் மாதத்தில் நிஸான் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒட்டுமொத்த 10,284 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.

இதில், உள்நாட்டில் விற்பனையாகியவற்றின் எண்ணிக்கை எண்ணமோ 2,107 யூனிட்டுகள் மட்டுமே ஆகும். அதேவேளையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 8,177 யூனிட்டுகள் ஆகும். இதில், உள்நாட்டில் விற்பனையான எண்ணிக்கை குறைவாக இருப்பதைப் போலவே ஆண்டு -டூ- ஆண்டு விற்பனை எண்ணிக்கையும் சரிவையேச் சந்தித்து உள்ளது.
2023 ஜூனைக் காட்டிலும் 17.44 சதவீதம் விற்பனைச் சரிவாகும். சுமார் 445 யூனிட்டுகளே இவற்றிற்கு இடையே வித்தியாசமாக உள்ளன. அதேவேளையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மிகப் பெரிய உச்சத்தை சென்ற மாதம் எட்டி இருக்கின்றது. 149.30 சதவீத விற்பனை வளர்ச்சியையே 2024 ஜூன் மாத ஏற்றுமதி சந்தித்துள்ளது.
2023 ஜூன் மாதத்தில் 3,280 யூனிட்டுகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2024 ஜூன் மாதத்தில் 8,177 யூனிட்டுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதி என இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் நிறுவனம் 76.34 சதவீத வளர்ச்சியை நிஸான் நிறுவனம் பெற்றிருக்கின்றது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் நிஸான் வாகனங்கள் பங்களாதேஷ், உகாண்டா, ப்ரூநேய் உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியர்களைக் கவரும் விதமாகவும் இந்த நிறுவனம் மிகப் பெரிய நெட்வொர்க்கை நாட்டில் உருவாக்கி இருக்கின்றது. 272 டச் பாயிண்டுகளைத் தற்போதுக் கொண்டிருக்கின்றது. இதனை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
சேலம், ஸ்ரீநகர், டெல்லி மற்றும் துர்காபூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்திலேயே அது புதிய டச் பாயிண்டுகளை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிஸான் நிறுவனம் அதன் ஏற்றுமதி உத்தியை தற்போது மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றது.
இதன் வாயிலாக அதன் ஏற்றுமதி அளவு இன்னும் பலமடங்கு அதிகரிக்கக் கூடும். நிஸான் நிறுவனம் இப்போதைய நிலவரப்படி மேக்னைட் எனும் ஒற்றை கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கூரோ ஸ்பெஷல் எடிசன் மற்றும் கெசா சிவிடி ஸ்பெஷல் எடிசன் ஆகிய சிறப்பு பதிப்புகளிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
வழக்கமான பதிப்பைக் காட்டிலும் இது சற்று அதிக சிறப்பம்சங்களையும், கவர்ச்சியான பேனல்களைக் கொண்டாதகவும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே நிஸான் மேக்னைட் கொண்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 152 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கணிசமான விற்பனைச் சரிவை நிஸான் மேக்னைட் சந்தித்து இருந்தாலும், உலக அளவில் ஏற்றுமதியில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை அது சந்தித்து இருப்பது நிறுவனத்திற்கு சற்றே ஆறுதலாக விஷயமாக அமைந்திருக்கின்றது. இதேபோல் அடுத்தடுத்து வரும் நாட்களிலும் இந்த நிறுவனம் ஏற்றுமதியில் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








