நம்பவே முடியாத குறைவான விலையில் களமிறங்கிய புதிய கார்! இந்தியாவே இதுக்காகதான் இத்தன நாளா காத்து கிடந்துச்சு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், அக்டோபர் 4ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய கார் குறித்த விரிவான தகவல்களை எல்லாம் இந்த செய்தியின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைன் (Design) வெகுவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அலாய் வீல்களுக்கு புதிய டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது 16 இன்ச் அலாய் வீல்கள் ஆகும். பின் பகுதியில் டெயில்லேம்ப்களின் டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன் பகுதியில் அகலமான மற்றும் பெரிய க்ரில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 'L' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகளும் கவனம் ஈர்க்கின்றன. வசதிகளை (Features) பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ரியர் ஏசி வெண்ட்கள் ஆகியவை எல்லாம் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
அத்துடன் 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டடரும் நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் போன்றவை எல்லாம் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பாதுகாப்பு வசதிகள் அனைத்தும், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது என்பதுதான். செயல்திறனை பொறுத்தவரையில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் ஒன்றாகும்.
அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 100 ஹெச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 5.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
அத்துடன் இவை அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது முதலில் முன்பதிவு (Booking) செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இந்த விலையில் விற்பனை செய்யப்படும். அதற்கு பிறகு விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் தக்க வைத்து கொள்ளும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே கூறியிருந்தது. அது அப்படியே நடந்துள்ளது.
ஆம், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை பெட்ரோல்/மேனுவல் மற்றும் பெட்ரோல்/ஏஎம்டி ஆகிய வேரியண்ட்களின் விலை மாற்றமே செய்யப்படவில்லை. முன்பு என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டதோ, அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படவுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.
ஏனெனில் பொதுவாக கார் நிறுவனங்கள் எல்லாம், அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும்போது, ஆரம்ப நிலை வேரியண்ட் முதற்கொண்டு அனைத்து வேரியண்ட்களின் விலைகளையும் உயர்த்தி விடும். ஆனால் நிஸான் நிறுவனம் அப்படி செய்யவில்லை என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
ரெனால்ட் கைகர் (Renault Kiger), டாடா பன்ச் (Tata Punch), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி3எக்ஸ்ஓ (Mahindra XUV3XO) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) உள்ளிட்ட கார்களுடன், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








