இவ்ளோ கம்மியான விலையில் எஸ்யூவி ரக காரை விக்க முடியுமா? இந்த நிறுவனத்துக்கு கோயில் கட்டிதான் கும்பிடணும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சுமாராக 4 வருடங்கள் கடந்த பின்னரும் கூட, பெரிதாக சொல்லி கொள்ளும்படி ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்டேட்கள் எதுவும் இன்னும் செய்யப்படவில்லை. எனினும் இந்த குறை கூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படவுள்ளது. ஆம், நிஸான் நிறுவனம் இந்தியாவில் மேக்னைட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு களமிறக்குவதற்கு முழுமையாக தயாராகி விட்டது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் அக்டோபர் 4ம் தேதி (October 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புதிய டீசர் வீடியோ (Teaser Video) ஒன்றை நிஸான் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இது இந்த காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில், ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், டிசைனில் நிறைய மாற்றங்களை கொண்டிருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக முன் பகுதியில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் அலாய் வீல்களுக்கு புதிய டிசைன் கொடுக்கப்படலாம். டிசைன் மாற்றங்கள் தவிர, ஒரு சில கூடுதல் வசதிகளையும் நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. தற்போது வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படவுள்ளன.

அவை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும். மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
இந்திய சந்தையில் துவண்டு போயுள்ள விற்பனையை மீட்டெடுக்கும் முயற்சியில் நிஸான் நிறுவனம் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக அடுத்த சில ஆண்டுகளில், 5 புதிய கார்களை களமிறக்க நிஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவது காரான நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail), கடந்த சில வாரங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், இரண்டாவதாக வரவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எஸ்யூவி ரக கார் ஒன்றையும், 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எஸ்யூவி ரக கார் ஒன்றையும் நிஸான் நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கவுள்ளது.
இந்த வரிசையில் ஐந்தாவதாக இந்திய சந்தையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக அது நிஸான் மேக்னைட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வரும் ஆண்டுகளில், இந்தியாவில் நிஸான் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய கார்களுக்கு எல்லாம், விற்பனையில் சவாலை ஏற்படுத்தலாம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை 6 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.27 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் நிறைய அப்டேட்கள் செய்யப்படவுள்ளதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.
இருப்பினும், விலை உயர்வு மிகவும் அதிகமாக எல்லாம் இருக்காது என நாங்கள் கருதுகிறோம். எனவே இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என்பதே எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








