இந்தியாவே எதிர்பார்த்த கார் இப்ப வரப்போகுது! தீபாவளிக்கு இந்த காரை புக் பண்ணிட வேண்டியது தான்!
நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் என்ற எஸ்யூவி காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி அறிமுகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. மற்ற எஸ்யூவி காருக்கும் இந்த காருக்கும் என்ன வித்தியாசம்? ஃபேஸ்லிஃப்ட் செய்யும் போது என்னென்ன அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
நிஸான் நிறுவனம் மேக்னைட் என்ற எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் விற்பனையாகும் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் காராக இல்லாவிட்டாலும், இந்த கார் தொடர்ந்து குறிப்பிட்ட தக்க எண்ணிக்கையில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகி வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த கார் குறைந்த விலையில் விற்பனையாவது தான்.

இது மட்டுமல்லாமல் இந்த கார் தனித்துவமான டிசைன் அம்சத்தை கொண்டுள்ளது. காண்பவர்கள் கண்களை கவரும் வகையில் இந்த காரின் வடிவமைப்பு இருக்கிறது. மற்ற எஸ்யூவி கார்களை விட இந்த கார் சற்று வித்தியாசமாக லுக்கில் இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். தற்போது இந்த காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து புதிய அப்டேட்களுடன் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இப்படியாக இந்த கார் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்படும் போது அதில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த ஸ்பை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதை வைத்து பார்க்கும் போது இந்த காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் எந்த பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இந்த காரின் அலாய் வீல் டிசைனில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறைந்த விலையில் விற்பனையானாலும் இதில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள கார்களில் இருக்கும் அம்சங்களை விட இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. முக்கியமாக இந்த காரில் பிஎம் 2.5 ஏர் பில்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இதுபோக பின்பக்க ஏசி வெண்ட்கள் 7 இன்ச் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் சார்ஜர்கள், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஆம்பியண்ட் லைட்டிங் உள்ள அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அப்டேட்டில் இந்த காரின் உட்புறம் உள்ள இன்ஃபோடைமென்ட் சிஸ்டம் பெரிதாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதில் உள்ள யூஐ மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தற்போது விற்பனையாகி வரும் மாடலில் 8 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதேநேரம் முன்பே சொன்னது படி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மாற்றப்படுகிறது. இதுபோக சிங்கிள் பேன் சன்ரூஃப், வெண்டிலேட்டட் சீட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சங்கள் எல்லாம் இந்த செக்மெண்டில் உள்ள போட்டி கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நிஸான் மேக்னைட் காரின் முக்கியமான அம்சம் இது கிராஷ் டெஸ்ட் சோதனையில் சிறப்பான ரேட்டிங் பெறுவது தான். இதற்கு முன்னர் இரண்டு ஏர் பேக்குகளுடன் பேஸ் வேரியண்ட் கார் குளோபல் என்கேப் சோதனையில், கடந்த 2022ம் ஆண்டு 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றது.
இதற்கு இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களும் முக்கியமான காரணங்களாக இருந்தன. முக்கியமாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகிள் டைனமிக் கண்ட்ரோல், அரவுண்ட் வியூ மானிட்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளன.
இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை தற்போது விற்பனையாகி வரும் மாடலில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் இதிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜின் தான் சிறப்பாக விற்பனையாகிறது.
இது 72 பிஎஸ் பவரையும் 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது 100 பிஎஸ் பவரையும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டில் இந்த இன்ஜின்கள் பெர்பார்மென்ஸ் மற்றும் ஹீட் மேனேஜ்மெண்டில் சற்று மாற்றம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜின் எல்லாம் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதில் டர்போ இன்ஜின் மட்டும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கூடுதலாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்துள்ளது. நிஸான் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த காரின் விற்பனை அதிகமாக அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் தற்போது விற்பனையாக வரும் மாடல்களை விட புதிதாக அப்டேட் செய்யப்பட்ட உடன் இந்த காரின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை விலை அதிகமாக அதற்கான வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications









