இந்தியாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆயிடுச்சு! பிக்-அப் ஆகாமல் தவிக்கும் பிரபல கார் நிறுவனங்கள்!!
நிஸான் (Nissan) மற்றும் ரெனால்ட் (Renault) நிறுவனங்கள் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றன. இந்த இரு நிறுவனங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையிலான கார்களே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், கடந்த அக்டோபர் மாத விற்பனையில் ரெனால்ட் அதிக ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இந்த இரு நிறுவனங்களில் இருந்தும் கடந்த அக்டோபர் மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட்டும், ஜப்பானிய கார் நிறுவனமான நிஸானும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக, இரு நிறுவனங்களுக்கும் கார்களை உற்பத்தி செய்வதில் இருந்து நிறைய விஷயங்களில் பண செலவும், நேர விரயமும் மிச்சமாகிறது. இருப்பினும், இந்த இரு நிறுவனங்களும் மார்க்கெட்டில் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகின்றன.

இது, இந்த நிறுவனங்களின் கார்கள் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரியும். நிஸானை காட்டிலும் ரெனால்ட் கடந்த அக்டோபர் மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் ரெனால்ட்டின் கடந்த மாத மொத்த விற்பனையே வெறும் 3 ஆயிரத்து 870 மட்டுமே ஆகும். மாருதி சுஸுகியில் பலரால் வாங்கப்படாத காரின் விற்பனை எண்ணிக்கை இதனை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
ரெனால்ட்டின் விற்பனை எண்ணிக்கையே இவ்வளவுதான் என்றால், நிஸானின் விற்பனை எண்ணிக்கை எந்த அளவிற்கு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். கடந்த ஆண்டில் இருந்து ரெனால்ட் கார்களின் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான கார்களையே ரெனால்ட் விற்பனை செய்து இருந்தது. துல்லியமாக பார்த்தால், இந்த ஆண்டு அக்டோபரில் 9 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது.

ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரை காட்டிலும் அக்டோபரில் 653 கார்களை ரெனால்ட் அதிகமாக விற்பனை செய்துள்ளது. ஏனெனில், கடந்த செப்டம்பரில் 3 ஆயிரத்து 217 கார்களை மட்டுமே ரெனால்ட் விற்பனை செய்திருந்தது. இந்தியாவில் தற்போதைக்கு மொத்தம் மூன்றே 3 ரெனால்ட் கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள், வழக்கம்போல் கடந்த மாதத்திலும் அதிக எண்ணிகையில் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் காராக முதலிடத்தை ரெனால்ட் டிரைபர் பிடித்துள்ளது.
கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிரைபர் கார்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 111 ஆகும். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபரில் 2 ஆயிரத்து 80 டிரைபர் கார்களும், கடந்த செப்டம்பரில் வெறும் ஆயிரத்து 538 டிரைபர் கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிரைபருக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட ரெனால்ட் காராக 2வது இடத்தில் கைகர் உள்ளது. விலை குறைவான ரெனால்ட் ஹேட்ச்பேக் காரான கைகர் கடந்த மாதத்தில் மொத்தம் ஆயிரத்து 53 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 2023 அக்டோபரிலும், 2024 செப்டம்பரிலும் கைகர் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டவில்லை. இந்த இரு கார்கள் மட்டுமின்றி, கடந்த மாதத்தில் 706 க்விட் கார்களையும் ரெனால்ட் விற்பனை செய்துள்ளது. நிஸான் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 3 ஆயிரத்து 121 கார்களை விற்பனை செய்துள்ளது. 2 ஆயிரத்து 573 நிஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2023 அக்டோபரை காட்டிலும் இது 21% அதிகமாகும்.

2024 செப்டம்பரை காட்டிலும் சுமார் 48% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 2 ஆயிரத்து 113 கார்களை மட்டுமே நிஸான் விற்பனை செய்திருந்தது. நிஸானில் இருந்து தற்சமயம் மேக்னைட் மற்றும் எக்ஸ்-டிரைல் என இரு கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மாதத்தில் நிஸான் விற்பனை செய்த 3,121 கார்களில் 3 ஆயிரத்து 119 கார்கள் நிஸான் மேக்னைட் கார்களாகும். மீதி 2 கார்கள் மட்டுமே எக்ஸ்-டிரைல் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நிஸான் மேக்னைட் கார்களின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகவே உள்ளது. ஆனால், மேக்னைட் என்கிற ஒரேயொரு பிரபலமான காரை மட்டுமே நிஸான் விற்பனை செய்வது இந்த நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணமாகும். மறுப்பக்கம், ரெனால்ட் கார்கள் விற்பனையும் இந்தியாவில் பெரியதாக வளர்ச்சி காண்பதுபோல் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









