டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு செக்... நாடே காத்து கிடந்த கார் அறிமுகம்... இந்த விலையை யாருமே எதிர்பார்க்கல...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், இன்று (ஆகஸ்ட் 1) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் (Variant) மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். அதன் விலை 49.92 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த கார், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாது.
அதற்கு மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக விலை என்றாலும் கூட, நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில், அதற்கு ஏற்ப நிறைய வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அடாஸ் (ADAS), முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி போன்ற அம்சங்கள் எல்லாம் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் வழங்கப்படவில்லை. இது இந்த காரை எதிர்பார்த்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றமான விஷயமாக இருக்கலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 161 பிஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேடில் ஷிஃப்டர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகிய அம்சங்களுக்காக இந்த இன்ஜின் உடன், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார், வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), ஹூண்டாய் டூஸான் (Hyundai Tucson) மற்றும் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) போன்ற கார்களுடன், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் போட்டியிடும்.
நிஸான் நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக, தற்போது விற்பனையில் உள்ள மேக்னைட் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Nissan Magnite Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications