ஃபார்ச்சூனர் மார்க்கெட்டை காலி பண்ண போகும் புதிய நிஸான் கார்... விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?
நிஸான் (Nissan) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் எக்ஸ்-டிரைல் காரை வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. நிஸான் நிறுவனத்தின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காராக எக்ஸ்-டிரைல் அறிமுகம் செய்யப்படுகிறது. விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700, டாடா சஃபாரி, ஜீப் மெரிடியன், டொயோட்டா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ள நிஸான் எக்ஸ்-டிரைல் காரின் விலையை எந்த அளவிற்கு எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜப்பானை சேர்ந்த நிஸான் இந்தியாவில் அதற்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி வருகிறது. தற்போதுதான், மேக்னைட் மூலமாக ஓரளவிற்கு மார்க்கெட்டில் காலூன்ற நிஸான் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், விரைவில் எக்ஸ்-டிரைல் என்கிற புதியதொரு மிட்-சைஸ் எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய நிஸான் தயாராகி வருகிறது.

எக்ஸ்-டிரைல் காரை வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நிஸான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌரவ் வட்சா, நிஸான் எக்ஸ்-டிரைல் கார் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு விற்பனையில் போட்டியாக இருக்காது என தெரிவித்துள்ளார். அவரது இந்த கூற்றுப்படி பார்க்கும்போது, ஃபார்ச்சூனரை காட்டிலும் எக்ஸ்-டிரைல் அளவில் சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இதன் காரணமாக, காரின் விலையும் குறைவாக இருக்கும். டொயோட்டா ஃபார்ச்சூனர் பெட்ரோல்- ஆட்டோமேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.35 லட்சமாக உள்ளது. இதனை காட்டிலும் எக்ஸ்-டிரைல் காரின் விலையை மிகவும் குறைவாக எதிர்பார்க்க முடியாது. இதற்கு முக்கிய காரணம், நிஸான் எக்ஸ்-டிரைல் ஆனது முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் கார்களுக்கு வரி அதிகமாக விதிக்கப்படுவது வழக்கம். இதனால், ஃபார்ச்சூனரை காட்டிலும் அளவில் சிறியதாக இருப்பினும், ஃபார்ச்சூனரை விட மிகவும் குறைந்த விலையில் புதிய எக்ஸ்-டிரைல் காரை எதிர்பார்க்க முடியாது. ஃபார்ச்சூனரை காட்டிலும் அதிகப்பட்சமாக ரூ.3 லட்சம் வரையில் குறைந்த விலையில் எக்ஸ்-டிரைல் கொண்டுவரப்படலாம்.
ஃபார்ச்சூனர் உடன் ஒப்பிடுகையில் நிஸான் எக்ஸ்-டிரைல் வேறுப்பட்ட கார் என கஸ்டமர்கள் நினைக்க ரூ.3 லட்சம் ஆனது போதுமானதாக இருக்கும். இருப்பினும், முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், நிஸான் எக்ஸ்-டிரைலின் ஆன்-ரோடு விலை 10% கூடுதலாக நிர்ணயிக்கப்படும். இது எக்ஸ்-டிரைல் காரின் விற்பனையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனருடன் போட்டியிட போவதில்லை என்றாலும், புதிய நிஸான் எக்ஸ்-டிரைல் காருக்கு விற்பனையில் ஏற்கனவே கூறியதுபோல் டொயோட்டா ஹைகிராஸ், மாருதி சுஸுகி இன்விக்டோ, மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்டவை போட்டியாக இருக்கும். இந்த காருடன் ஒப்பிடுகையில், எக்ஸ்-டிரைல் காரில் கூடுதலாக சில தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம்.
இருப்பினும், பவர் முன் இருக்கைகள், அடாஸ் வசதிகள் மற்றும் பவர் பூட் லிட் போன்றவற்றை எக்ஸ்-டிரைலில் நிஸான் வழங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நிஸான் எக்ஸ்-டிரைல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.30 லட்சம் - ரூ.32 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். சஃபாரி, எக்ஸ்யூவி700, இன்விக்டோ மற்றும் ஹைகிராஸ் கார்களுடன் ஒப்பிட்டால், இந்த விலை அதிகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜப்பான் கார்கள் என்றாலே நல்ல மைலேஜ் தருபவை மற்றும் செயல்திறன்மிக்கவை என்கிற கருத்து பரவலாக உள்ளது. அதற்கு புதிய நிஸான் எக்ஸ்-டிரைல் எந்த விதத்திலும் சளைத்ததாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். இதற்காகவே, இந்தியாவில் இந்த காரை சிலர் வாங்குவார்கள். இருப்பினும், எக்ஸ்-டிரைல் காரின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டுமெனில், இந்தியாவிலேயே இந்த காரை உற்பத்தி செய்வதை பற்றி நிஸான் யோசிக்க வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications









