டொயோட்டா பார்ச்சூனர் கதைய முடிக்க வரும் புது கார்... இந்தியாவே இதுக்குதான் வெயிட் பண்ணீட்டு இருக்கு...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail). இது மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட ஒரு எஸ்யூவி ரக கார் ஆகும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதமே இந்திய சந்தையில் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. எனினும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னோட்டமாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரின் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தவரையில், எல்இடி பகல் நேர விளக்குகள், ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப் உடன் ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் போன்றவை வழங்கப்படலாம்.

வசதிகளை பொறுத்தவரையில், 3 ஸ்போக் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ட்யூயல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரி, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற வசதிகள் எல்லாம் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), ஆட்டோ ஹோல்டு ஃபங்ஷன் உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட வசதிகளையும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் நாம் எதிர்பார்க்கலாம். நிஸான் நிறுவனம் எக்ஸ்-ட்ரெயில் காரை சிபியூ (CBU - Completely Built Unit) வழியில் இந்தியாவிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரின் விலை சற்று அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சுமார் 40 லட்ச ரூபாய் என்ற அளவில் இந்த காருக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இது நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரின் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்பட்சத்தில் வேண்டுமானால், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம். ஆனால் தற்போதைய நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டிருக்கலாம். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் ஹூண்டாய் டூஸான் (Hyundai Tucson) போன்ற கார்களுக்கு போட்டியாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார்களுக்கு எல்லாம் சிறப்பான ஒரு மாற்று ஆப்ஷனாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








