நம்ம ஊர் ஆளுங்க கூட இந்த அளவுக்கு பத்திரமாக வெச்சிருக்க மாட்டாங்க - வெளிநாட்டில் அம்பாசிடர் கார்!!
அம்பாசிடர் (Ambassador) காரை பற்றி அறியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு காலத்தில் அந்த அளவிற்கு பிரபலமாக இருந்த கார் அம்பாசிடர் ஆகும். வெளிநாட்டில் விற்பனையில் இருந்த பிரபலமான காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே அம்பாசிடர் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஹிந்துஸ்தான் நிறுவனம் அம்பாசிடர் காரை உருவாக்கியது. வெளிநாட்டு காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பழமையான அம்பாசிடர் காரை வெளிநாட்டினர் கண்டால் எவ்வாறான ரியாக்ஷன் கொடுப்பார்கள் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? அது பற்றிய ஒரு செய்தியை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஒரு காலத்தில் அரசியல்வாதிகளில் இருந்து பெரிய, பெரிய கோடீஸ்வரர்கள் வரையில் பயன்படுத்திய கார் அம்பாசிடர் ஆகும். அதன்பின், கோடீஸ்வரர்கள் மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ என சென்றுவிட்டார்கள். ஆனால், அரசாங்க அதிகாரிகள் பலரது அலுவலக காராக மிக நீண்ட வருடங்களாக அம்பாசிடர் கார்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை.

பயன்பாடு குறைய, குறைய 2014ஆம் ஆண்டிற்கு பின் அம்பாசிடர் கார்கள் விற்பனை ஒரேடியாக நிறுத்திக் கொள்ளப்பட்டது. இருப்பினும், இப்போதும் அம்பாசிடர் கார்கள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. அவ்வாறு இங்கிலாந்தில் இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான அம்பாசிடர் கார் ஒன்றை அங்கிருக்கும் யூடியூப்பர் ஆச்சிரியத்துடன் வீடியோவாக காட்சிப்படுத்தி உள்ளார்.
ஐ டிரைவ் எ கிளாசிக் என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த கிளாசிக்கான தோற்றம் கொண்ட அம்பாசிடர் கார் காட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் ஓடும் இந்த அம்பாசிடர் காரை பற்றிய விபரங்களையும் அந்த பெண் யூடியூப்பர் வீடியோவில் பேசியுள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், மோரீஸ் ஆக்ஸ்ஃபோர்டு சீரிஸ் 3 என்கிற வெளிநாட்டு காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்துஸ்தான் அம்பாசிடர் ஆகும்.

இந்த கார் பழுப்பு மற்றும் கருப்பு என ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் இருப்பதை காணலாம். பல வெளிநாடுகளில் வரவேற்பை பெற்ற மோரீஸ் ஆக்ஸ்ஃபோர்டு சீரிஸ் 3 காரின் அதே பெயிண்ட்டில் இந்த அம்பாசிடர் கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. வாங்கிய சில காலத்திற்கு பின்னர் கார் இவ்வாறு பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்பாசிடர் காரின் உரிமையாளர் இங்கிலாந்தில் உள்ளார்.
இத்தனை வருடங்களாக இந்த அம்பாசிடர் காரை அதன் உரிமையாளர் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, முறையாக பராமரித்துவந்த அந்த நபர் நீண்ட காலத்திற்கு பின் இந்த அம்பாசிடர் காரை முற்றிலுமாக ரீ-ஸ்டோர் செய்துள்ளார். இருப்பினும், இப்போதும் இந்த அம்பாசிடர் காரில் இரும்பு சக்கர ரிம்கள் மற்றும் அதற்கு மத்தியில் க்ரோம் ஹப் கேப்கள் இருப்பதை காண முடிகிறது.

வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் க்ரோம் கார்னிஷ் உடன் உள்ளன. முன்பக்க க்ரில் பகுதியிலும் க்ரோம் உள்ளதை பார்க்கலாம். பம்பர்கள் உலோகத்திலானதாக உள்ளன. முன்பக்க மற்றும் பின்பக்க ஃபெண்டர்கள் பருத்த வடிவத்தில் உள்ளன. இவை எல்லாம் அந்த காலத்தில் அம்பாசிடர் காரில் வழங்கப்பட்டவை ஆகும். அவற்றை இப்போதும் இந்த அம்பாசிடர் காரில் பார்க்க முடிகிறது.
ஆனால், காருக்கு உள்ளே ஓனர் தனது விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்துள்ளார். குறிப்பாக, காருக்குள் இருக்கும் டேஸ்போர்டு வேறொரு காரில் இருந்து எடுத்து பொருத்தப்பட்டுள்ளது. காருக்குள் இருக்கைகள் நன்கு அகலமானவைகளாக உள்ளன. எரிபொருள் அளவை காட்டும் கருவியை புதியதாக வாங்கி பொருத்தியுள்ளனர். இந்த அம்பாசிடர் காரில் இருப்பது ஜப்பானிய இஸுஸு நிறுவனத்தின் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காருக்குள் இருந்து பார்க்கும்போது சாலை நன்கு தெளிவாகவும், அகலமாகவும் தெரிவதாக வீடியோவில் இந்த யூடியூப்பர் கூறுகிறார். அம்பாசிடர் காரின் வெற்றிக்கு இது முக்கிய காரணம் ஆகும். இந்தியாவில் நிறைய பேரிடம் இப்போதும் அம்பாசிடர் கார்கள் உள்ளன. ஆனால், இங்கிலாந்து போன்ற தொலைத்தூர தேசத்தில் இப்போதும் அம்பாசிடர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது என்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









