ரூ.2.5 கோடி செலவு பண்றதை விட இது ஸ்மார்ட் மூவ்!! சில இலட்சங்கள் செலவு பண்ணாலே போதும்!
டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து உலகின் பல நாடுகளில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) ஆகும். இந்தியாவிலும் லேண்ட் க்ரூஸர் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருப்பது லேண்ட் க்ரூஸர் எல்சி300 (LC300) ஆகும். இந்த நிலையில் இங்கு ஒரு லேண்ட் க்ரூஸர் எல்சி200 கார் லேண்ட் க்ரூஸர் எல்சி300 கார் போன்று மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், கார்களை மாடிஃபிகேஷன் செய்வது ஒருபக்கம் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, சாலையில் மற்ற கார்களில் இருந்து தனித்து தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் தங்களது கார்களை வித்தியாசமான தோற்றத்திற்கு மாற்றிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் இங்கு ஒரு பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் புதியது போன்று மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், காரின் பழைய மற்றும் புதிய தோற்றங்களை காணலாம். புதிய லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரின் விலை தற்சமயம் ரூ.2.50 கோடி என்கிற அளவில் உள்ளது.
அவ்வளவு தொகையை செலவிட தயாராக இல்லாத பழைய லேண்ட் க்ரூஸர் எல்சி200 காரின் உரிமையாளர் ஒருவர் அதனை புதிய எல்சி300 ஆக மாற்றிக் கொண்டுள்ளார். எல்சி300 ஆக மாற்ற, இந்த எல்சி200 காரின் கதவு பேனல்கள், ரூஃப் லைனர், ஹெட்லைட், பம்பர், விளக்குகள் என அனைத்தும் முதலில் அகற்றப்பட்டன. அதன்பின், காரின் உடலில் இருந்து சிறிய டொக்கு மற்றும் கீறல்களை சரிச்செய்ய ஆரம்பித்தனர்.

இதற்காக, பல்வேறு விதமான லேயர்கள் காரின் பெயிண்ட் மீது கொடுக்கப்பட்டன. புதியதாக கொடுக்கப்பட்டுள்ள லேயர்கள் கீறல்கள், வெப்பம் மற்றும் நீரினால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை தடுக்கக்கூடியவைகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் பொருத்துவதற்காக பொனெட், ஃபெண்டர்கள், ஃபாக் விளக்குகள், பம்பர்கள், மிரர் கேப், க்ளாடிங்க்ஸ் ஹெட்லைட்ஸ், பாடி பேனல்ஸ் மற்றும் டெயில்லேம்ப்ஸ் உள்ளிட்டவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
சில பாகங்களை வெளிநாடுகளில் இருந்தும் கூட கொண்டுவந்துள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கூறியதுபோல், கார் மாடிஃபிகேஷன்களுக்கு நம் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆதலால், போலீசாரின் அபராதங்களை சந்திக்காமல் இருக்க, அங்கீகரிக்கப்பட்ட கார் கஸ்டமைசேஷன் நிறுவனங்களில் கார்களை மாடிஃபை செய்யவும். ஏனெனில், அவர்களது பணிகள் நல்ல தரத்தில் இருக்கும்.

அவற்றினால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுவே, சாலையோர மெக்கானிக் கடைகளில் வேலைகள் தரமானதாக நடந்தாலும், அங்கு பொருத்தப்படும் கார் பாகங்கள் தரமற்றவை ஆக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அவை சுற்றுச்சூழலுக்கு கெடுதலை ஏற்படுத்துவதுடன், பெரிய செலவை இழுத்துவிடுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால், எதிர்பாராத விபத்துகளும் நடக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை பிரச்சனைகள் இருக்கும் காரணத்தினாலேயே கார் மாடிஃபிகேஷன்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆதலால், கார் மாடிஃபிகேஷன்களை முடிந்தவரையில் தவிர்க்க பாருங்கள். இவ்வாறு பழைய காரை புதியது போல் மாற்றுவதற்கு பதிலாக, இதனை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஒன்றை வாங்குவது சிறந்தது.


Click it and Unblock the Notifications









