கார் வாங்கும்போது இந்த கருவி உள்ளதா என பார்த்து வாங்குங்க!! அரசு எப்போது வேண்டுமானாலும் கட்டாயமாக்கலாம்...
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், நம் நாடு பரப்பளவில் எந்த அளவிற்கு பெரியது என்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. அதற்கேற்ப உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இந்தியா விளங்குகிறது. மக்கள் தொகை அதிகமாக இருந்தாலே, அங்கு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். இருப்பினும், அதற்காக சாலை விபத்துகளால் உயிரிழப்போரை கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணிகள் முக்கிய காரணமாக விளங்குகின்றன.
அவற்றுள் ஒன்று, அதிவேக பயணம் ஆகும். கேட்க கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், நம்மில் நிறைய பேர் வேகமாக வாகனம் ஓட்டவே விரும்புகிறோம். ஓட்டுனர் தூங்குவதை உணர்ந்து எச்சரிக்கும் கருவி இருப்பதை போல, அதிவேக பயணத்தை எச்சரிக்கும் கருவியும் பயன்பாட்டில் உள்ளது. தற்போதுள்ள மாடர்ன் கார்களில் இந்த கருவி ஸ்டாண்டர்டாக பொருத்தப்படுகிறது.

கார் 80kmph வேகத்தை தாண்டினால் டிரைவரை எச்சரிக்கும் விதமாக ஒரு பீப் சத்தம் கேட்கும். அதுவே, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் அதிகப்பட்ச வேக வரம்பான 120kmph வேகத்தை தாண்டினால் அந்த பீப் சத்தம் இடைவிடாது தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். பீப் சத்தம் மட்டுமின்றி, அதிவேகம் குறித்த எச்சரிக்கையும் காருக்குள் இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் காட்டும் விதத்தில் இந்த டெக்னாலஜி உருவாக்கப்படுகிறது.
இந்த டெக்னாலஜியை புத்திசாலித்தனமான வேக உதவி அமைப்பு (ISA) எனவும் அழைக்கின்றனர். இந்த டெக்னாலஜியின் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால், இது கார் இயக்கும் சாலை மற்றும் அந்த சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை பொறுத்து இயங்கும். அதாவது, நகரத்திற்குள் காருக்கான அதிகப்பட்ச வேகம் 50kmph மட்டுமே. அதுவே, நெடுஞ்சாலைகளில் அதிகப்பட்சமாக 120kmph வேகம் வரையில் செல்லலாம்.

ஆக, இவ்வாறு கார் இயங்கும் சாலையை பொறுத்து இந்த கருவி செயல்படுகிறது. இதற்காக, இந்த கருவியுடன் சேர்த்து கேமரா பொருத்தப்படுகிறது. மேலும், ஜிபிஎஸ்-இல் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு தகவல்களை கொண்டு இந்த கருவி செயல்படுகிறது. வெளிநாடுகளில், வெறும் பீப் சத்தத்திற்கு பதிலாக குரல் மூலமாக மற்றும் வீடியோ மூலமாக எச்சரிக்கும் அளவிற்கு இந்த ISA கருவி அப்டேட் ஆகிவிட்டது.
இந்த அளவிற்கு சிறப்புமிக்க மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ISA கருவி கார்களில் பொருத்தியே ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், ஐரோப்பாவில் வருகிற ஜூலை மாதம் முதல் அனைத்து புதிய கார்களிலும் ISA கட்டாயமாக்கப்படுகிறது. அமெரிக்காவிலும், நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களில் கிட்டத்தட்ட 60% ஓட்டுனர்கள் ISA தங்களது வாகனத்தில் இருப்பதை விரும்புவதாக அங்குள்ள ஓர் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் தனது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.

இதனால், விரைவில் அமெரிக்க நாடுகளிலும் இந்த கருவி கட்டாயமாக்கப்படலாம். ஆனால், நம் இந்தியாவில் எப்போது இது கட்டாயமாக்கப்படும் என்பதுதான் இப்போது கேள்வியே. சாலை போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்ற சமீப ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவிற்கான பாரத் என்சிஏபி அதில் முக்கியமான ஒன்றாகும்.
அதேபோல், சாலைகளின் தரத்தையும் மத்திய நெடுஞ்சாலை துறை வெகுவாக மேம்படுத்தியுள்ளது. அதேபோல், ISA கருவியை கட்டாயமாக்கினால் சாலை பாதுகாப்பு இன்னும் மேம்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, கிராம மற்றும் சிறிய நகரங்களில் வேகமாக கார் ஓட்டுபவர்களை இந்த கருவி பெரிய அளவில் தடுக்கும். ஏனெனில், மாநகர்புறங்களை காட்டிலும் இத்தகைய பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பு குறித்து புரிதல் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் 6 ஏர்பேக்ஸ் கட்டாயம் என்பன உள்பட நம் இந்திய அரசு கடந்த சில வருடங்களில் பல்வேறு நடவடிக்கைகளை சாலை பாதுகாப்புக்காக கொண்டுவந்துள்ளது. ஆதலால், ISA கருவி வரும் மாதங்களில் கார்களில் கட்டாயப்படுத்தப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. ஆனால், இந்த அட்வான்ஸ்டு கருவி வழங்கப்படுவதினால், கார்களின் விலைகள் அதிகரிக்கும். அதேபோல், இந்த கருவி ஆனது அதிவேகம் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்க மட்டுமே. அதாவது, தெரியாமல் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களிடம் மட்டுமே இந்த கருவி எடுப்படும்.


Click it and Unblock the Notifications









