விற்பனைக்கே இன்னைக்குதான் வந்துச்சு அதுக்குள்ள டெலிவரியா! ரெடிமேட் சட்ட மாதிரி விற்பனைக்கு கொண்டாந்திருக்காங்க
உலக புகழ்பெற்ற ஜெர்மன் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche) அதன் பனமேரா (Panamera) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது மூன்றாம் தலைமுறை பனமேரா ஆகும். இது ஏற்கனவே உலக அளவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
2023 ஆம் ஆண்டே இதன் உலக அளவிலான விற்பனைத் தொடங்கிவிட்டது. ஆனல், இந்தியாவில் இப்போதே இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. விற்பனைக்கு வந்த கையோடு ரெடிமேட் சட்டைப் போல இந்த காரின் டெலிவரி பணிகளை போர்ஷே தொடங்கி இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 1.69 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

முந்தைய தலைமுறையிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக இதில் பல்வேறு மாற்றங்களை போர்ஷே செய்திருக்கின்றது. உள் மற்றும் வெளி என இரண்டு பக்கங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. முன் பக்க பம்பரில் இருந்து மாற்றங்கள் தொடங்குகின்றன. பெரிய காற்று புகும் துளைகள், அழகிய ஹெட்லேம்ப், மெல்லியி எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காகவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால், முந்தைய தலைமுறையைக் காட்டிலும் கூடுதல் அழகானதாக புதிய தலைமுறை பனமேரா காட்சியளிக்கின்றது. இதேபோல் காரின் உட்பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. டேஷ்போர்டுக்கு மிகவும் சிம்பிளான லுக் வழங்கப்பட்டு இருக்கின்றது.
அதேவேளையில் ஆடம்பர அம்சங்களுக்கு அதில் சற்றும் பஞ்சமில்லாமல் இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. குறிப்பாக, இதன் டேஷ்போர்டு பார்க்க மிகவும் சிம்பிளானதாக தென்பட்டாலும், அது மனதைக் கவரும் வகையில் உள்ளது. இதேபோல், கன்ட்ரோல்களும் மிக மிக சிறப்பாகவே உள்ளது. இந்த காரில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும்.
ஆனால், விற்பனைக்குக் கிடைக்கும் பனமேராவில் 4 இருக்கைகள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கும். இதையே ஐந்து பேர் வரை பயணிக்கின்ற வகையில் மாற்றிக் கொள்ளும் வசதியை போர்ஷே வழங்கி இருக்கின்றது. 12.3அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.9அங்குல திரை கோ-டிரைவருக்காகவும், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 14ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கைகள், ஆம்பியன்ட் லைட், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐந்துக்கும் மேற்பட்ட ஏர் பேக்குகள், இஎஸ்பி, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ரிமோட் பார்க் அசிஸ்ட் மற்றும் அடாஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.9 லிட்டர் ட்வின் டர்போ வி6 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 353 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
8 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனே இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஒற்றை எஞ்சின் தேர்வில் மட்டுமே போர்ஷே பனமேரா இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன் பனமேராவின் வி8 ஆப்ஷனை போர்ஷே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு மற்றும் அதிக திறனை வெளியேற்றும் கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போது போர்ஷே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இந்த கார் மாடல் அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் அதேவேளையில், அதி வேக இயக்க அனுபவத்தை வழங்கும். இந்த கார் மணிக்கு 270 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








