தனியார் அமைப்பு நடத்திய சர்வே வாயிலாக உண்மை என்னனு தெரிஞ்சிருச்சு! இ-கார்கள பெருசா யாருமே கண்டுக்கறது இல்லையா!
இந்தியாவில் புதிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், 10-இல் 8 இந்தியர்கள் பிரீமியம் ரக கார் (Premium Car)களையே வாங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களைக் காட்டிலும், அதே கார் மாடலில் அதிக ஆடம்பரம் மற்றும் பிரீமியம் அம்சங்கள் கொண்ட தேர்வையே இந்தியர்கள் அதிகம் வாங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல், இந்தியாவில் மின்சார கார் (Electric Car)-களைக் காட்டிலும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் (Hybrid Car)-களுக்கே அதிகம் டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.
கிராண்ட் தோர்ண்டன் பாரத் (Grant Thornton Bharat) எனும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஓர் சர்வே வாயிலாகவே இந்த தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. இந்தியாவில் விற்பனையாகும் ஒட்டுமொத்த விற்பனையில் 40 சதவீதம் விற்பனை வரவேற்பை ஹைபிரிட் வாகனங்களே பெற்று வருகின்றது என்பது இதன் சர்வே வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

மைலேஜ் தருவதில் மிக சிறந்த வாகனமாக ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்கள் இருக்கின்றன. ஹைபிரிட் கார்களில் ஐசிஇ (எரிபொருளில் இயங்கும் எஞ்சின்) உடன் ஓர் எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட்டு இருக்கும். இந்த மோட்டாரின் இயக்கத்திற்காக சிறிய பேட்டரி பேக்கும் தனியாக வழங்கப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த பேட்டரி பேக்குகள் காரின் இயக்கத்தின் வாயிலாக தானாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, தனியாக மின்சார வாகனங்களைப் போல சார்ஜ் செய்து பயன்படுத்தும் ஹைபிரிட் வகை வாகனங்களும் சந்தையில் விற்பனையில் இருக்கின்றன. இந்த வசதியைக் கொண்டிருப்பதாலேயே ஹைபிரிட் கார்கள் குறைவான எரிபொருளை எடுத்துக் கொண்டு அதிக மைலேஜை வழங்குகின்றன.
இந்த திறனைக் கொண்டிருப்பதாலேயே இந்தியர்களும் இந்த வகை வாகனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டு உள்ளனர். மிக முக்கியமாக வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் காட்டிலும் ஹைபிரிட் வாகனங்கள் மிகவும் குறைவான காற்று மாசை ஏற்படுத்துகின்றன. இதன் காரணத்தினாலும் இந்தியர்கள் ஹைபிரிட் வாகனங்களை அதிகம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், சில மாநில அரசாங்கங்களும் ஹைபிரிட் வகை வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு வரி தள்ளுபடி மற்றும் பதிவு கட்டணத்தில் சலுகை உள்ளிட்டவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மக்கள் அதிகம் ஹைபிரிட் வகை கார்களை வாங்க முன் வந்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக 34 சதவீதம் பேரே பெட்ரோல் வாகனங்களை வாங்க விரும்புவதாக கிராண்ட் தோர்ண்டன் பாரத் அதன் சர்வேயின் வாயிலாக தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து, வெறும் 16 சதவீதம் முதல் 17 சதவீதம் மக்களே மின்சார வாகனங்களை வாங்க விரும்புவதாகவும் அது தெரிவித்திருக்கின்றது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு அரசுகள் (மத்திய-மாநில) சிறப்பு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் அவற்றிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்ட் இன்னும் ஆரம்ப புள்ளியிலேயே இருப்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. சார்ஜிங் நிலைய பற்றாக்குறை, பேட்டரி வாகனங்களின் திடீர் தீ விபத்து சம்பவம் மற்றும் அதிக நேரம் சார்ஜாக எடுத்துக் கொள்வது இதுபோன்ற காரணங்களாலேயே பலர் மின்சார வாகனங்களை வாங்க தயங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ஹைபிரிட் வகை வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








