விற்பனைக்கே வரல அதுக்குள்ள விருதா! இது ரெனால்ட் கார்தானா! மாருதி-டாடாவுக்கே இந்த தகவல் தல சுத்த வச்சிருக்கும்!
இந்த உலகிற்கு தன்னுடைய மிக சிறந்த வருகையை பதிவு செய்ய இருக்கின்றது ரெனால்ட் (Renault) நிறுவனம் தயாரித்து இருக்கும் 100 சதவீத எலெக்ட்ரிக் கார் மாடலான 5 இ-டெக் (5 E-Tech). உலகின் மிக உயரிய விருதுகள் சிலவற்றையே இந்த கார் பெற்றிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் மாடல் இன்னும் அறிமுகம்கூட செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே அது, 'ஆண்டின் சிறந்த கார் - புதிய கார் உலக சாம்பியன் 2024/2025' என்கிற விருதை வென்றிருக்கின்றது.
லாப நோக்கமற்ற அமைப்பான 'பெஸ்ட் கார்ஸ் ஆஃப் தி இயர்' (Best Cars of the Year)-ஆல் வழங்கப்பட்டதே இந்த விருது ஆகும். இவர்களின், வருடாந்திர புதிய கார் உலக சாம்பியன்ஷிப்பின் போதே இந்த விருது ரெனால்ட் 5 இ-டெக் எலெக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரெனால்ட் 5 இ-டெக் காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் 2025 ஆம் ஆண்டிற்கே திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே விற்பனைக்குகூட வராத இந்த கார் மிக உயரிய வகை விருதை, அதுவும் ஓர் சுதந்திரமாக செயல்படும் அமைப்பிடம் இருந்து பெற்றிருக்கின்றது.
5 இ-டெக் ஓர் சூப்பர் மினி வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். அதாவது, மிகவும் குட்டியான தோற்றம் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் கார் மாடல் ஆகும். இந்த பிரிவிலும் 5 இ-டெக் எலெக்ட்ரிக் கார் ஓர் விருதை வென்றிருக்கின்றது. 'சிறந்த எலெக்ட்ரிக் கார் 2024/2025' என்கிற விருதுதான் அது.

விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இத்தனை விருதுகளை இந்த கார் வென்றிருப்பதனால், உலக அளவில் பலரின் கவனத்தை அது ஈர்க்க தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்த கார் மாடல் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஆகையால், விற்பனையிலும் மிக சிறப்பாக இந்த கார் மாடல் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், விற்பனைக்கு வந்த பின்னர் இதுபோன்ற இன்னும் பல்வேறு விருதுகளை அந்த கார் குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த குட்டியான எலெக்ட்ரிக் காரின் வருகை நாள் பற்றிய துள்ளியமான விபரம் வெளியாகவில்லை. இருப்பினும், 2025 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவே இது உலக சந்தையில் விற்பனைக்கு வந்திவிடும் என தெரிகின்றது.
முதலில் ஐரோப்பிய சந்தையில் இந்த கார் மாடல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. இதற்கு பின்னரே மற்ற உலக நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு வருமாம். ஆனால், இதன் இந்திய வருகை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால், இந்தியாவில் இந்த காரை இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.
அதேவேளையில், ரெனால்ட் நிறுவனம் அதன் க்விட் இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா டியாகோ இவி-க்கு அது போட்டியாக அமையும். அழகு, எஞ்ஜினியரிங், திறன் வெளிப்பாடு என அனைத்திலும் சிறந்த விளங்கியதன் விளைவாகவே ரெனால்ட் 5 இ-டெக் இ-காருக்கு உயரிய விருதுகளை வாரி வழங்கி இருக்கின்றனர்.
ஷிரோ நகமுரா (முன்னாள் நிசான் வடிவமைப்புத் தலைவர்), ரே மாஸ்ஸி (டெய்லி மெயில் மோட்டார் பத்திரிகையாளர்), டிம் ஷா (டிவி-ஸ் கார் எஸ்ஓஎஸ்-இன் நட்சத்திரம்), பால் ஸ்விஃப்ட் (உலக சாதனை படைத்த டிரைவர்) மற்றும் மைக் ரூதர்ஃபோர்ட் (சிறந்த சிஓடிஒய் நிறுவனர்) ஆகியோரே நடுவராக இருந்து இந்த காரை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
இந்த கார், நவீன தொழில்நுட்பம் மற்றும் உன்னதமான வடிவமைப்பிற்கு உகந்த வாகனம் என்பதே இந்த விருதுகளின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆனால், கார் பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களும் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுபற்றிய தகவலை ரெனால்ட் நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இந்த குட்டி எலெக்ட்ரிக் காரை ரெனால்ட் அதன் ஏஎம்பிஆர் (AmpR) எனும் சிறிய கார்களுக்கான பிளாட்ஃபார்மில் வைத்தே தயார் செய்திருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இது ஓர் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட பிளாட்ஃபாரம் ஆகும். அதிக திறனை வெளிப்படுத்துவது தொடங்கி அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய இ-கார்களையும் இந்த தளத்தில் வைத்து தயார் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரெனால்ட் 5 இ-டெக் ஓர் முழு சார்ஜில் 248 மைல்கள் ரேஞ்ஜை வழங்கும் என கூறப்படுகின்றது. அதாவது, இந்த காரில் ஃபுல் சார்ஜில் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதேபோல், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறந்த ரைடு அனுபவத்தை வழங்குவதிலும் இந்த கார் மாடல் தலை சிறந்ததாக இருக்கும் என கருதப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் மட்டுமல்ல, பிரிட்டிஷ் மோட்டார் ஷோவில் கலந்துக் கொண்ட சில பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலுமே ரெனால்ட் 5 இ-டெக் காருக்கான விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மிக சிறப்பான வரவேற்பை நாட்டு மக்கள் மத்தியில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








