கோமெட்டை அடிச்சு துவம்சம் பண்ண போகுது நம்ம ரெனால்ட்.. நம்ம குப்பனும், சுப்பனும் இந்த காருக்காகதான் வெயிட்டிங்!
இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி சீன கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG)-யே மலிவான விலையில் எலெக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில், எம்ஜி-க்கே டஃப் கொடுக்கும் வகையில் ரெனால்ட் (Renault) மிகவும் குறைவான பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களான ரெனால்ட் (Renault) மற்றும் நிஸான் (Nissan) ஆகிய இரண்டும் சென்ற ஆண்டில் கூட்டணியை மேற்கொள்வதாக அறிவித்தன. மேலும், இந்த கூட்டணியின்கீழ் அவர்கள் ஆறு புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இதில், இரண்டு ஏ பிரிவு எலெக்ட்ரிக் கார் (A Segment Electric Vehicles) மாடல்களாகும். அதாவது, மலிவு விலையைக் கொண்ட ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் கார்கள் இரண்டும் அவர்களின் பிளானில் உள்ளன. இந்த நிலையிலேயே நாளைய தினம் (பிப்ரவரி 21) ரெனால்ட் நிறுவனம் உலக அளவில் அதன் அடக்கமான அளவிலான (பாக்கெட் சைஸ்) எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது, நிறுவனம் அறிவித்திருந்த இரண்டு மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வாகன உலகின் கணிப்பின்படி, உலக அளவில் தற்போது விற்பனையில் இருக்கும் டாசியா ஸ்பிரிங் இவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ரெனால்ட் க்விட் இவி என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஆனால், இதனை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. தற்போது வெறும் நிழற்படத்தை மட்டுமே அது வெளியிட்டு இருக்கின்றது. இந்த படத்தை வைத்தே இது க்விட் இவி என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், இதையே இந்தியாவில் ரெனால்ட் விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக எம்ஜி நிறுவனத்தின் கோமெட் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.98 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதைவிட குறைவான பட்ஜெட் விலையில் வேறு எந்த நிறுவனமும் இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

ஏன் நம்ம டாடா மோட்டார்ஸே அதன் எலெக்ட்ரிக் காரை ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. டியாகோ இவி-யின் விலையே இதுவாகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த மாதிரியான சூழலிலேயே இவர்கள் அனைவருக்கும் (டாடா மோட்டார்ஸ், எம்ஜி) டஃப் கொடுக்கக் கூடிய ஓர் விலை குறைவான காரையே நாளைய தினம் ரெனால்ட் வெளியீடு செய்ய இருக்கின்றது.
உலக அளவில் டாசியா ஸ்பிரிங் இவி 26.8 kWh பேட்டரி பேக் தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், 43 பிஎச்பி மற்றும் 125 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின்சார மோட்டாரே அந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதே திறன்களுடனேயே இந்தியாவிற்கான ரெனால்ட் க்விட் இவியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் விலையும் மிக மிக சவாலாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. அதாவது, எம்ஜி கோமெட்டிற்கு சவால்விடக் கூடிய விலையிலேயே நிறுவனத்தின் முதல் ஏ பிரிவு எலெக்ட்ரிக் கார் இருக்கும் கருதப்படுகின்றது.
ரூ. 6.5 லட்சம் அல்லது 7 லட்ச ரூபாய்க்கும் குறைவான ஆரம்ப விலையிலேயே க்விட் இவி இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அறிமுகத்தைத் தொடர்ந்து க்விட் இவியின் விலைகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது. ஆகையால், உலகளாவிய வெளியீட்டைத் தொடர்ந்து ரெனால்ட் க்விட் இவி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை 2025 அல்லது 2026 ஆம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என கூறப்படுகின்றது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் எம்ஜி கோமெட் இவி மற்றும் டாடா டியாகோ இவி ஆகியவற்றிற்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications









