இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க கோடி ரூபாய்களில் முடிந்த ஆர்டர்!! பச்சை போர்டு வாகனங்கள் தான் இனி..
ரெவ்ஃபின் (Revfin), எலக்ட்ரிக் வாகனங்களை வாடகைக்கு விடுவதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம். தனி நபருக்கு என்று மட்டுமல்லாமல், பெரிய பெரிய கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கும் தேவையான எலக்ட்ரிக் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனமாக ரெவ்ஃபின் விளங்குகிறது. இது, அந்த கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கும் இலாபகரமான முடிவாக இருப்பதால், இவ்வாறு வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றன. இந்த வகையில், ரெவ்ஃபின் நிறுவனம் புதியதாக ஒரு கார்ப்பிரேட் நிறுவனத்தில் சுமார் 15,000 எலக்ட்ரிக் வாகனங்களை குத்தகைக்கு விடுவதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.
கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு வாகனங்களை குத்தகைக்கு விடும் தொழில் ஆனது மிக நீண்ட வருடங்களாகவே உள்ளது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களை குத்தகைக்கு விடுவது சமீப காலமாக தான் உள்ளது. அத்தகைய தொழிலில் சிறந்து விளங்கிவரும் ரெவ்ஃபின் நிறுவனம் ஷேடோவ் ஃபாக்ஸ், லாக்9, எவேரா போன்ற பிரபலமான கார்ப்பிரேட் நிறுவனங்கள் உடன் கூட்டணியில் உள்ளது.

அந்த வரிசையில் தற்போது, சன் மொபைலிட்டி உடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ள ரெவ்ஃபின் 15,000 எலக்ட்ரிக் வாகனங்களை சன் மொபைலிட்டிக்கு வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரூ.100 கோடியில் முடிந்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக பசுமையான போக்குவரத்தை கொண்டுவருவது மட்டுமின்றி, கமர்ஷியல் போக்குவரத்தையும் மாற்ற வேண்டும் என்பது ரெவ்ஃபின் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.
இத்தகைய நிறுவனத்தின் சன் மொபைலிட்டி உடனான கூட்டணி அறிவிப்பை ரெவ்ஃபின் நிறுவனத்தை நிறுவியவரும், சிஇஓ-வுமான சமீர் அகர்வால் மற்றும் சன் மொபைலிட்டியின் சிஇஓ ஆனந்த் பத்ஜத்யா ஆகியோர் ஒன்றாக வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ரெவ்ஃபின் நிறுவனத்தின் சமீர் அகர்வால் கூறுகையில், "எலக்ட்ரிக் வாகன போக்குவரத்து துறையில் எங்களது இருப்பை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கியமான படியாகும். சன் மொபைலிட்டி போர்ட்ஃபோலியோ ரெவ்ஃபினின் உத்தியுடன் சரியாக ஒத்துப் போகிறது.
இது எங்களின் இரு சக்கர வாகன போர்ட்ஃபோலியோவை இரட்டிப்பாக்கி உள்ளது மற்றும் எங்கள் லாஸ்ட்-மைல் டெலிவிரி நெட்வொர்க்கை கணிசமாக விரிவுப்படுத்துகிறது. இந்தியாவில் நிலையான மொபைலிட்டி தீர்வுகளை விரைவாக ஏற்றுக்கொள்வதற்கு பங்களிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

சன் மொபைலிட்டி சிஇஓ ஆனந்த் பட்ஜத்யா கூறுகையில், "சன் மொபைலிட்டியில், புதுமையான எனர்ஜி சொல்யூஷன்கள் மூலம் நிலையான மொபைலிட்டியை செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ரெவ்ஃபின் உடனான எங்களது கூட்டணி, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மாற்றத்தை விரைவுப்படுத்துவதை பிரதிபலிக்கிறது. எங்கள் போர்ட்ஃபோலியோவை ரெவ்ஃபினின் ஃபைனான்சிங் உடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த கூட்டணி இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் கணிசமான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
இந்திய அளவிலான தனது வணிகத்தை ஆக்டீவ்வாக வைத்திருக்க, ரெவ்ஃபின் நிறுவனம் அதன் வணிகத்தை முடிந்தவரையில் விரைவாக டபுள் மடங்கு அதிகரிக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது சன் மொபைலிட்டி உடன் இணைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 65 ஆயிரம் வாகனங்களுக்கான ஃபைனான்சிங்கை ரெவ்ஃபின் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான கடன் மதிப்பு ஏறக்குறைய ரூ.900 கோடி என கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ரெவ்ஃபின் நிறுவனம் ஆரம்பத்தில் எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது, எலக்ட்ரிக் 2-வீலர்கள், 4-வீலர்கள், பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் நிலையங்கள் போன்றவற்றிற்கான கடன் நிதியையும் ரெவ்ஃபின் ஏற்றுக் கொள்கிறது. சன் க்ரூப் மற்றும் மைனி க்ரூப் இணைந்ததில் 2017ஆம் ஆண்டில் தோன்றிய நிறுவனம் தான் சன் மொபைலிட்டி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டுமெனில், முதலில் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். ரெவ்ஃபின் போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் அந்த சூழலை உருவாக்குவதற்கு பெரிதும் உதவுகின்றன. ஏனெனில், தனியார் நிறுவனங்கள் தங்களது போக்குவரத்திற்கு எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்தால், தானாக பொது மக்களிடையே எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.


Click it and Unblock the Notifications








