பிரெஞ்சு நாட்டு பிராண்டாலேயே இந்த விஷயத்துல டாடாவ அடிச்சுக்க முடியலயா! ரத்தன் டாடா உருவாக்கனது அசைக்க முடியாது
இந்தியாவின் கூபே எஸ்யூவி ரக கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கர்வ் (Curvv) கார் மாடலையும், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சிட்ரோன் (Citroen) நிறுவனம் பசால்ட் (Basalt) கார் மாடலையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டும் சந்தையில் ஒன்றிற்கு ஒன்று போட்டியாக உள்ளன. ஸ்டைல், சிறப்பம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் இரண்டும் ஒன்றிற்கு ஒன்று டஃப் கொடுக்கும் வகையிலேயே உள்ளன. இந்த நிலையிலேயே இந்த இரண்டு கார் மாடல்களையும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது பாரத் என்சிஏபி (Bharat NCAP).
அதுகுறித்த முடிவுகளையே சமீபத்தில் அது வெளியிட்டது. விலையிலும், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் டாடா கர்வ் காருக்கு மிகுந்த சவாலை வழங்கிக் கொண்டிருந்த சிட்ரோன் பசால்ட், பாதுகாப்பு விஷயத்தில் லேசாக பின் தங்கிவிட்டதை இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆமாங்க, சிட்ரோன் பசால்ட் காரைவிட டாடாவின் கர்வ் கார் மாடலே மிகுந்த பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடல் ஆகும். இதுகுறித்த விரிவான விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.

சிட்ரோன் பசால்ட்: பாரத் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மாடல் ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 32 புள்ளிகளுக்கு 26.19 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 35.90 புள்ளிகளையும் பெற்றதன் விளைவாகவே அது ஒரு ஸ்டாரை இழந்திருக்கின்றது.
இருப்பினும், இந்த கார் அதன் பயணிகளுக்கு அதீத பாதுகாப்பை வழங்கும் என்பது தற்போது பாரத் என்சிஏபியின் முடிவுகளின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. சிட்ரோன் நிறுவனம் இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர்பேக்குள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, மும்முனை சீட் பெல்ட் வசதியை அனைத்து பயணிகளுக்கும் அது வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்களினாலும், அதிக உறுதியான கட்டுமானத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு அதிகபட்ச ஸ்டார் ரேட்டிங்காக ஐந்துக்கு நான்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் அது நான்கு ஸ்டார்களையே பெற்றிருக்கின்றது.
இந்தியாவில் சிட்ரோன் பசால்ட் கார் ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 13.83 லட்சம்தான். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். மேலும், எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் பசால்ட்-இல் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும்.
டாடா கர்வ்: இந்த கார் மாடல் சிட்ரோன் பசால்ட்-ஐவிட சற்று காஸ்ட்லியான கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 10 லட்சம் ஆகும். மேலும், இதன் அதிகபட்ச விலை ரூ. 19 லட்சம் ஆகும். விலையில் எப்படி அதிகமானதாக இக்கார் மாடல் இருக்கின்றதோ, அதேபோல், பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் மிக உயரியதாகக் காட்சியளிக்கின்றது.
பாரத் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மாடல் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை குவித்து சாதித்துக் காட்டியிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலை இந்தியாவில் ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு அவதாரங்களிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டுமே ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையே குவித்துக் கொண்டிருக்கின்றன.
சொல்லப் போனால் மோதல் ஆய்வில் இரண்டும் ஒரே மாதிரியான பாதுகாப்பு தர புள்ளிகளைப் பெற்றிருக்கின்றன. டாடா கர்வ் ஐசிஇ பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு, 29.5 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 43.66 புள்ளிகளையும் பெற்று குவித்திருக்கின்றது.
இதன் மின்சார வெர்ஷனான கர்வ் இவி பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 32 புள்ளிகளுக்கு 30.81 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 49 புள்ளிகளுக்கு 44.83 புள்ளிகளையும் அள்ளி குவித்தது. இரண்டிற்கும் (கர்வ் ஐசிஇ மற்றும் கர்வ் இவி) இடையில் ஒரு சில புள்ளிகளே வித்தியாசமாக இருக்கின்றன, இருந்தாலும், ஸ்டார் ரேட்டிங்கில் இரண்டும் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவர்கள் விஷயத்திலும் ஐந்து நட்சத்திரங்களையேப் பெற்றிருக்கின்றன.
இந்த கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக கர்வ் ஐசிஇ-யில் 6 ஏர் பேக்குகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, லெவல் 2 வகை அடாஸ் அம்சம், நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல் டாடா கர்வ்-இவியிலும் ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு அம்சம், ஹில் ஸ்டார்ட், இஎஸ்பி, லெவல் 2 வகை அடாஸ் போன்ற மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக கூறியதைப் போல, டாடா மோட்டார்ஸ் கர்வ் ஐசிஇ-யை ரூ. 9.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், கர்வ் இவி-யை ரூ. 17.49 லட்சம் என்கிற தொடக்க விலையில் இருந்தும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் (ஐசிஇ அல்லது இவி) மற்றும் சிட்ரோன் பசால்ட், இரண்டும் நல்ல பாதுகாப்பை வழங்கக் கூடியவையே இருக்கின்றன. இரண்டில் எதை தேர்வு செய்தாலும் பாதுகாப்பான பயணம் உறுதியாகக் கிடைக்கும். பசால்ட்டைவிட சற்று அதிக பாதுகாப்பை டாடாவின் தயாரிப்பில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், இந்த கார்கள் என்னதான் அதிக பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இருந்தாலும், போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு பயணிக்க வேண்டும் என்பது அவசியமாகும். மேலும், அதிக வேகத்தில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதும் எங்களின் அறிவுறுத்தல் ஆகும். அதீத வேகம் பாதுகாப்பான சூழலையும் பாதுகாப்பற்றதாக மாற்றிவிடும் என்பதை எப்போது மறந்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








