மாருதி காருக்கு மட்டும் தான் டிமாண்ட் இருக்கு! ஹூண்டாய், ஹோண்டா எல்லாம் கிட்ட கூட நெருங்கல!!
எஸ்யூவி (SUV) கார்களை மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பித்த பின்பு செடான் (Sedan) கார்கள் விற்பனை மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்துவிட்டது. இது கடந்த நவம்பர் (November) மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. தற்போதைக்கு ஓரளவிற்கு விற்பனையாகும் ஒரேயொரு செடான் கார் மாடல் என்றால் அது மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire) ஆகும். மற்ற செடான் கார்களின் விற்பனை அந்த அளவிற்கு இல்லை. இதனை வெளிக்காட்டும் வகையில் வெளியாகி உள்ள கடந்த நவம்பர் மாத செடான் கார்கள் விற்பனை குறித்த விபரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விலையுயர்ந்த லக்சரி கார்கள் இல்லாமல், இந்தியாவில் தற்போதைக்கு 11 செடான் ரக கார்கள் விற்பனையில் உள்ளன. அவை மொத்தமாக 24 ஆயிரத்து 757 கார்கள் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 30 ஆயிரத்து 665 செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, செடான் கார்கள் விற்பனை ஆனது 5 ஆயிரத்து 908 கார்கள் குறைந்துள்ளது. கடந்த 2024 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் நவம்பரில் செடான் கார்கள் விற்பனை ஆனது 3,184 யூனிட்கள் குறைந்துள்ளது. ஏனெனில், கடந்த அக்டோபர் மாதத்தில் 27 ஆயிரத்து 941 செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட செடான் காராக வழக்கம்போல் மாருதி சுஸுகி டிசைர் இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 779 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் 15 ஆயிரத்து 965 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், டிசைர் கார்கள் விற்பனை ஆனது 4 ஆயிரத்து 186 யூனிட்கள் கடந்த ஆண்டு நவம்பரை காட்டிலும் இந்த ஆண்டு நவம்பரில் குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலும் கூட 12 ஆயிரத்து 698 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிசைருக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) 4 ஆயிரத்து 248 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.
2023 நவம்பரில் 3 ஆயிரத்து 850 அவ்ரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் 4 ஆயிரத்து 805 அவ்ரா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வரிசையில் 3வது இடத்தில் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) 2 ஆயிரத்து 628 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. கடந்த 2023 நவம்பரிலும் இதே எண்ணிக்கையிலான அமேஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், இந்த ஆண்டு அக்டோபரில் 2 ஆயிரத்து 393 அமேஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 4வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) 1,457 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 நவம்பரில் இதனை காட்டிலும் குறைவான விர்டுஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், கடந்த 2024 அக்டோபரில் 2 ஆயிரத்து 351 விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) கார்கள் முறையே 1,213 மற்றும் 1,131 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. 7வது, 8வது இடங்களில் உள்ள டாடா டிகோர் மற்றும் ஹோண்டா சிட்டியின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 859 மற்றும் 709 ஆகும். 9வது, 10வது மற்றும் கடைசி 11வது இடங்களில் மாருதி சுஸுகி சியாஸ் (597), டொயோட்டா காம்ரி (130) மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் (6) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் பெரும்பாலான செடான் கார்கள் விற்பனை ஆனது மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. இருப்பினும், மாருதி சுஸுகி டிசைர் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்கள் சமீபத்தில் புதியதாக அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்த கார்களின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









