42நாட்களில் 43லட்சம் புதிய வாகனங்கள் விற்பனை.. இந்தியர்கள் எதை முன்னிட்டு இவ்ளோ வாகனங்கள வாங்கினாங்க தெரியுமா!
விழாக் காலம் என்றாலே இந்தியாவில் வாகன விற்பனை சற்றே சூடிபிடித்துக் காணப்படும். இது அனைவருக்கும் தெரிந்த ஓர் தகவல்தான். ஆனால், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2024 தீபாவளி பண்டிகையின் போது மிக அதிக எண்ணிக்கையில் புதிய வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. சொல்லப் போனால் 42 நாட்களில் 43 லட்சம் புதிய வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை விற்பனையாகிய வாகனங்களின் எண்ணிக்கையே இதுவாகும்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த 42 நாட்களில் இந்தியாவில் சுமார் 42 லட்சத்து 88 ஆயிரத்து 248 யூனிட்டுகள் புதிய வாகனங்கள் சேல் ஆகியிருக்கின்றன. இது ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations)ஆல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விபரம் ஆகும்.

சென்ற ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 15 அக்டோபர் தொடங்கி 25 அக்டோபர் வரையில் விற்பனையாகியதைவிட இது 11.76 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை இந்த தீபாவளியில் இரண்டு சக்கர வாகனங்களே சந்தித்து இருக்கின்றன. 13.79 சதவீத விற்பனை வளர்ச்சியையே அது சந்தித்து இருக்கின்றது.
அதாவது, 2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 29,10,141 யூனிட்டுகள் டூ-வீலர்கள் மட்டுமே விற்பனையான நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 33,11,325 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. ஆமாங்க, 33 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இந்த தீபாவளியை முன்னிட்டு புதிய டூ-வீலர்களை வாங்கி இருக்கின்றனர்.
இதேபோல், பயணிகள் கார்கள் பிரிவும் 7.10 சதவீதம் விற்பனை வளர்ச்சியைக் கண்டிருக்கின்றது. சென்ற ஆண்டு தீபாவளியின்போது 5,63,059 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில், 2024 தீபாவளியின்போது அது 6,03,009 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது. கார்களுக்கு அடுத்தபடியாக மூன்று சக்கர வாகனங்கள் மூன்றாம் இடத்தைப் படித்திருக்கின்றன.
சென்ற ஆண்டு பண்டிகைக் காலத்தில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 764 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில் இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 1 லட்சத்து 59 ஆயிரத்து 960 யூனிட்டுகள் வரை அவை விற்பனையாகி இருக்கின்றன. இது 6.81 சதவீதம் விற்பனை வளர்ச்சி ஆகும்.
இதேபோல், கமர்சியல் வாகனங்களும் கணிசமான அளவு விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து இருக்கின்றன. சென்ற ஆண்டில் 1,27,436 யூனிட்டுகளாக இருந்த விற்பனை நடப்பாண்டில் 1,28,738 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது. இதில் சோகம் என்னவென்றால் விவாசய பணிகளுக்கு பயன்படுத்தும் டிராக்டர் பிரிவு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது.
சென்ற ஆண்டு 86,640 யூனிட்டுகள் டிராக்டர்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் 1.64 சதவீதம் குறைந்து 85,216 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இதன் வாயிலாக விவசாயிகள் சிலர் இந்த தீபாவளியில் புதிய டிராக்டர் வாங்குவதை தவிர்த்திருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
அதேவேளையில், மற்ற வாகன பிரிவு மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைச் சந்தித்திருப்பதை வைத்து பார்க்கையில் மக்கள் பலரும் இந்த தீபாவளியில் புதிய வாகனம் வாங்க அதிகம் ஆர்வம் காட்டியிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 42 நாட்களில் 43 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருப்பதை வைத்து பார்க்கையில், மக்கள் மத்தியில் புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து இருப்பது தெளிவாக தெரிகின்றது. அதேவேளையில், வாகன உற்பத்தியாளர்கள் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியதன் காரணமாகவே இந்த அளவிற்கு அமோகமான விற்பனை வளர்ச்சியை புதிய வாகனங்கள் பெற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








