எல்லாராலும் வாங்கக்கூடிய விலையில் எலக்ட்ரிக் கார்!! ஸ்கோடா பக்காவா பிளான் போட்டு வெச்சிருக்கு!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் இந்தியாவில் புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய மார்கெட்டில் ஒன்றன்பின் ஒன்றாக விற்பனைக்குவர உள்ள இந்த எலக்ட்ரிக் கார்கள் மூலம் இந்தியாவை ஓர் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி மையமாக மாற்ற ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. மற்ற கார் நிறுவனங்களை போன்று, ஸ்கோடாவும் எலக்ட்ரிக் கார்களை வடிவமைப்பதில் தீவிரமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இதுவரையில் இன்னும் ஒரு ஸ்கோடா எலக்ட்ரிக் கார் கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், இந்தியாவில் அதிரடியாக நிறைய எலக்ட்ரிக் கார்களை ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்ய ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களுள் ஒருவரான மார்டீன் ஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக இந்தியாவில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுடன் ஸ்கோடா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் மார்டீன் ஜன் கூறியுள்ளார்.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்கோடா எலக்ட்ரிக் காராக என்யாக் கருதப்படுகிறது. ஏனெனில், ஸ்கோடா என்யாக் எலக்ட்ரிக் காரின் சாலை சோதனை பணிகள் ஏற்கனவே நம் இந்தியாவில் துவங்கிவிட்டன. ஸ்கோடா என்யாக் ஆனது சற்று விலைமிக்க எலக்ட்ரிக் கார் ஆகும். ஆதலால், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் வணிகத்தை கொஞ்சம் விலைமிக்க எலக்ட்ரிக் காரில் இருந்து ஸ்கோடா நிறுவனம் துவங்கவுள்ளது.
இதுகுறித்து பேசிய ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் போர்டு மெம்பர் மார்டீன் ஜன், "அனைத்து விதமான ஆப்ஷன்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எந்த முடிவும் எடுக்கப்படாததால், தற்போதைக்கு இதை பற்றி உங்களுக்கு எந்த விவரங்களையும் தெரிவிக்க எனக்கு சுதந்திரம் இல்லை. நிறைய பேர் வாங்கக்கூடிய எலக்ட்ரிக் காரை இந்தியாவுக்கு கொண்டுவர, விரும்பும் அனைத்தையும் நாங்கள் ஆலோசித்து பார்த்து வருகிறோம்.
அதை எப்படி, எப்போது செய்ய போகிறோம் என்பது இன்னும் தெரியவில்லை. இந்தியாவிற்கு சிறந்ததாக இருக்கும் ஆப்ஷன்களை நாங்கள் கொண்டுவர பார்க்கிறோம். ஆதலால், இந்தியாவில் மின்சார வாகன சந்தையின் வளர்ச்சியில் நிச்சயமாக நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம்" என்றார். எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்காக இந்திய நிறுவனங்கள் உடன் ஸ்கோடா ஆட்டோ கூட்டணி சேருமா? எனவும் மார்டீன் ஜன் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய வகையிலான எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் நுழைவதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் தற்போது ஆராய்ந்து கொண்டிருப்பவைகளில் சிறந்த வழி எது என்பதை தீர்மானிப்பது முக்கியம். பின்னர் அந்த வழியின்படி தனியாக செயல்படுவது அல்லது பல்வேறு வகையான கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது எங்களது ஆப்ஷன்களாக உள்ளன" என்றார்.
மேலும் பேசிய மார்டீன் ஜன், "எலக்ட்ரிக் வாகன கொள்கைகள் மிக விரைவாக மாறுவதை நான் உலகளவில் உணர்ந்துள்ளேன். அரசாங்கங்கள் பல காரணங்களுக்காக கொள்கைகளை மாற்றுகின்றன. ஒவ்வொரு அரசாங்கத்திடம் இருந்தும் முடிந்தவரை தெளிவு பெற விரும்புகிறோம். அதேநேரம் நாங்கள் யதார்த்தமாகவும் இருக்கிறோம். எனவே எவ்வளவு தெளிவு பெறுகிறோமோ அவ்வளவுக்கு எங்களுக்கு நல்லது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்டீன் ஜன் கூறுவதை போல, எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. நம் இந்தியாவை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய ஸ்கோடா விரும்புகிறது என்றால், அதற்கேற்ப ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களையும் நாடு முழுவதும் ஸ்கோடா கொண்டுவர வேண்டியிருக்கும். இதற்கு நிச்சயமாக இந்திய கார்ப்பிரேட் நிறுவனங்களின் உதவி ஸ்கோடாவுக்கு தேவைப்படும்.


Click it and Unblock the Notifications








