தொடர்ச்சியா கேட்டு கொண்டே இருந்த இந்தியர்கள்.. ஒரு வழியா அந்த காரை மீண்டும் விற்பனைக்கு கொண்ட வந்த ஸ்கோடா...
ஸ்கோடா (Skoda) நிறுவனம் அதன் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான சூப்பர்ப் (Superb) கார் மாடலை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை முன் வைத்தே இந்த கார் மாடல் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஸ்கோடா நிறுவனம் அதன் சூப்பர்ப் கார் மாடலை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் மற்றும் அதிக சொகுசு வசதிகளைத் தாங்கிய செடான் ரக கார் மாடல் ஆகும். முன்னதாக விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதே வெர்ஷனே மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக ஓர் கார் மாடல் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனில் அதில் லேசான மாற்றம் அல்லது புதுப்பிக்கப்பட்ட நிலையிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்படும். ஆனால், ஸ்கோடா நிறுவனம் அதுமாதிரியான எந்தவொரு யுக்தியையும் சூப்பர்ப் கார் மாடலின் மறு வருகை விஷயத்தில் மேற்கொள்ளவில்லை.
எனவே முன்னதாக வழங்கப்பட்ட அதே அம்சங்களுடனேயே சூப்பர்ப் இப்போதும் காட்சிளிக்கின்றது. எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் தொழில்நுட்பங்கள் என அனைத்திலும் அப்படியே இருப்பது குறிப்பிடத்தகுந்தது. எல் அண்ட் கே ஏடி எனும் தேர்வில் மட்டுமே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கும். அறிமுகமாக இதற்கு ரூ. 54 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மாற்றங்கள் ஏதும் செய்யப்படாத காரணத்தினால் அதே க்ரில், எல் வடிவ டிஆர்எல்-கள் கொண்ட செவ்வக வடிவ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பனி மின் விளக்கு கொண்ட பம்பர் ஆகியவையும் அப்படியே உள்ளன. இந்த கார் மாடலின் பின் பக்கமும் எந்தவொரு மாற்றமும் இன்றிக் காட்சியளிக்கின்றது.
கேபினிலும் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், அதே இரண்டு நிற வண்ண அலங்கரிப்பில் சூப்பர்ப்-இன் உட்பக்கம் (கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில்) காட்சியளிக்கின்றது. அத்துடன், இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், மெல்லிய துளைகள் கொண்ட ஏசி வெண்ட், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

இத்துடன், 23.36 செமீ டச்-ஸ்கிரீன் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஒயர்டு ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட திரை இதுவாகும். இதுதவிர, டிரைவர்களுக்கான முழு டிஜிட்டல் திரை, 3 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட 610 வாட் கேன்டன் சவுண்ட் சிஸ்டம், 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள் ஆகியவையும் சூப்பர்ப்-இல் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த இருக்கைகள் வெண்டிலேட், கூலிங் மற்றும் சூடாக்கிக் கொள்ளும் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், சூப்பர்ப்-இல் சன்ரூஃப் வசதி வழங்கப்படவில்லை. பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாகக் கொண்ட கார் மாடலாக சூப்பர்ப் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக 9 ஏர் பேக்குகள் மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம் சூப்பர்ப்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதுதவிர, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்டவையும் ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரில் இடம் பெற்றிருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ இவிஓ டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இந்த எஞ்சினில் வழங்கப்படுகின்றது.

முதல் கட்டமாக ஸ்கோடா நிறுவனம் சூப்பர்ப் கார் மாடலின் 100 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கான புக்கிங் பணிகளே தொடங்கி இருக்கின்றன. முழுமையாக கட்டியமைக்கப்பட்ட யூனிட்டாகவே இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதனால்தான் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னதாக இந்த கார் மாடல் விற்பனையில் இருந்தபோது உள்ளூரிலேயை அசெம்பிள் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இப்போது வெளிநாட்டில் இருந்து எஃப்பியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் நோக்கிலேயே இவ்வாறு ஸ்கோடா சூப்பர்ப்-ஐ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









