ரொம்ப யோசிச்சு ஸ்கோடா அறிமுகம் செய்யும் முதல் எலக்ட்ரிக் கார்!! ஃபுல்லா சார்ஜ் பண்ணா எவ்வளவு தூரம் போகும்?
பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ (Bharat Mobility Expo) கண்காட்சியில் 2024 ஸ்கோடா என்யாக் இவி (Skoda Enyaq EV) என்ற எலக்ட்ரிக் கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள என்யாக் இவி, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் ஆகும்.
2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சி டெல்லியில் பிப்ரவரி 1 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் முதல் நாளான இன்று, செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ அதன் மாடர்ன் எலக்ட்ரிக் காரான என்யாக் இவி -ஐ காட்சிக்கு நிறுத்தி உள்ளது. பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது என்யாக் இவி எலக்ட்ரிக் காரின் 85 வேரியண்ட் ஆகும்.

இந்த வேரியண்ட்டில் என்யாக் இவி காரின் ரேஞ்ச் ஆனது 560கிமீ ஆகும். அதாவது, காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 560கிமீ தொலைவிற்கு பயணம் செய்யலாம். மேற்கத்திய நாடுகளில் ஸ்கோடா என்யாக் இவி ஆனது பிரபலமான எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக விளங்குகிறது. கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 55 ஆயிரம் என்யாக் இவி கார்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 2022ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட என்யாக் இவி கார்களை காட்டிலும் டபுள் மடங்கு அதிகமாகும். வெளிநாட்டு மார்க்கெட்களில் பல்வேறு விதமான வேரியண்ட்களில் என்யாக் இவி விற்பனை செய்யப்படுகிறது. அவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமான ரேஞ்சை வழங்கக்கூடியவைகளாக உள்ளன.

இந்தியாவில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டு உள்ள என்யாக் 85 காரை பொறுத்தவரையில், இது ஓர் ஆல்-வீல்-டிரைவ் கார் ஆகும். அதாவது, என்யாக் இவி காரின் இந்த வேரியண்ட்டில் முன்னாலும், பின்னாலும் தலா 1 எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இதில், பின் சக்கரத்தில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் சமீபத்தில்தான் சர்வதேச சந்தையில் ரீ-ட்யூன் செய்யப்பட்டது.
அத்துடன், காரின் வோல்டேஜ் கன்வெர்டரும் அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளதால், என்யாக் 85 எலக்ட்ரிக் காரில் 286 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த எலக்ட்ரிக் காரின் டாப்-ஸ்பீடு 180kmph ஆகும். 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த எலக்ட்ரிக் காரில் வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடலாம்.
82kWh திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ள என்யாக் 85 எலக்ட்ரிக் காரை 175 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் வெறும் 28 நிமிடங்களில் 10% சார்ஜில் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம். என்யாக் 85 காரின் ரியர்-வீல்-டிரைவ் வெர்சனும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்த வெர்சனில் காரின் பின்பக்கத்தில் மட்டுமே எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும்.
என்யாக் 85 ரியர்-வீல்-டிரைவ் வெர்சனுக்கு அதிகப்பட்சமாக 135 கிலோவாட்ஸ் வரையிலான சார்ஜர் மட்டுமே செட் ஆகும் என ஸ்கோடா தெரிவிக்கிறது. என்யாக் இவி -க்கு கடைசியாக ஸ்கோடா வழங்கிய சாஃப்ட்வேர் அப்டேட்டின் மூலம் பேட்டரி சார்ஜிங் வேகம் 22% வரையில் அதிகரித்துள்ளது. அத்துடன், டிரைவர் சாவியுடன் காரை விட்டு நீண்ட தொலைவிற்கு சென்றுவிட்டால், தானாக லாக் ஆகும் கதவுகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் என்யாக் இவி எலக்ட்ரிக் காரை தற்போதைக்கு பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிக்கு மட்டுமே நிறுத்தியுள்ளது. இன்னும், வெளியீடு, அறிமுகம் என நிறைய வேலைகள் உள்ளன. ஆதலால், ஸ்கோடா என்யாக் இவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.


Click it and Unblock the Notifications








