5 ஸ்டார்ஸ் கொடுக்கும் அளவிற்கு இந்த காரில் என்ன சிறப்பு இருக்கு? எந்தவொரு பயமும் இல்லாமல் ஓட்டிட்டு போகலாம்!!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. முக்கியமாக, பாதுகாப்புமிக்க கார்களை உற்பத்தி செய்வதில் ஸ்கோடா சிறந்து விளங்குகிறது. பல்வேறு ஸ்கோடா கார்கள் பாதுகாப்பில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன. அந்த வரிசையில், மற்றுமொரு ஸ்கோடா கார் ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்று ஆச்சிரியப்படுத்தியுள்ளது. எந்த ஸ்கோடா கார் அது என்பதையும், யூரோ என்சிஏபி-இல் அந்த கார் பெற்றுள்ள மதிப்பெண்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
என்சிஏபி (NCAP) என்பதன் முழு விரிவாக்கம் புதிய கார் பகுபாய்வு திட்டம் (New Car Assessment Program) என்பதாகும். இதன்படி, மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள் மோதல் சோதனைகளில் சோதித்து பார்க்கப்பட்டு, அவற்றின் பாதுகாப்பு தரம் குறித்து மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. என்சிஏபி ஆனது உலகின் ஒவ்வொரு கண்டத்திற்கும் என தனித்தனியாக உள்ளது.

அதாவது, அந்தந்த கண்டங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் புதிய கார்கள் கிராஷ் டெஸ்ட் செய்யப்படுகின்றன. இவை இல்லாமல், உலகளவில் என்று க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் உள்ளது. இந்த வகையில், ஐரோப்பிய கண்டத்திற்கு என பிரத்யேகமாக இருக்கும் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக புது, புது கார்கள் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில், செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் அதன் கோடியாக் மற்றும் சூப்பர்ப் கார்களை டெஸ்ட் செய்துள்ளது. இதில், ஸ்கோடா கோடியாக் காரின் பாதுகாப்பு தரத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். தற்போது யூரோ கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு இருப்பது மேம்படுத்தப்பட்ட 2ஆம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் கார் ஆகும்.

யூரோ என்சிஏபி டெஸ்ட்டில் இந்த ஸ்கோடா எஸ்யூவி கார் 5க்கு முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 100க்கு 89 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 83 மதிப்பெண்களையும் புதிய கோடியாக் பெற்றுள்ளது. அதேபோல், பாதுகாப்பு உதவி அமைப்புகளுக்காக 78 மதிப்பெண்களும், சாலையை பயன்படுத்தும் பாதசாரிகளின் பாதுகாப்புக்காக 81 மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன.
யூரோ என்சிஏபி-இல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டு இருப்பது இடதுப்பக்க ஸ்டேரிங் உடன் டீசல் என்ஜினை கொண்ட கோடியாக் 4X4 கார் ஆகும். இந்த காரில் என்ஜினின் இயக்க ஆற்றல் ஆனது நான்கு சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும். ஆதலால், கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டுச் செல்லக்கூடிய ஸ்கோடா கோடியாக் கார் தற்போது யூரோ என்சிஏபி-இல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களாக, இந்த கோடியாக் 4X4 காரில் 6 ஏர்பேக்குகள், அனைத்து இருக்கைகளிலும் ப்ரீடென்ஷனர்ஸ் உடன் சீட் பெல்ட் அணிந்து இல்லாததை எச்சரிக்கும் வசதி, குழந்தைகளுக்கான இருக்கையை பயன்படுத்த பொருத்தப்படும் ISOFIX கொக்கிகள் மற்றும் ADAS வசதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த கிராஷ் டெஸ்ட்டில் ஸ்கோடா கோடியாக் கார்கள் பல்வேறு விதங்களாக மோதலுக்கு உட்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன.
இந்த டெஸ்ட்டில் பெரியவர்கள் மற்றும் 10 & 6 வயது சிறுவர்களின் டம்மிகள் பயன்படுத்தப்பட்டன. 2ஆம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் கார் இந்தியாவில் தற்போதைக்கு சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. காரின் அறிமுகம் 2025ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கிறோம். புதிய கோடியாக் கார் பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் 2ஆம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் கார் தான் அப்படியே சில திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆதலால், இந்த யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கோடியாக் காருக்கும் கிட்டத்தட்ட பொருந்தும். இருப்பினும், இந்தியாவின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஒருமுறை புதிய ஸ்கோடா கோடியாக் உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









