விலை குறைவான வேரியண்டை வெளியேத்திட்டு, அதிக விலை தேர்வின் விலையை குறைச்சுட்டாங்க! 2லட்ச ரூபா குறைச்சுட்டாங்களா
ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளில் ஒன்றாக கோடியாக் (Kodiaq) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் வேரியண்டுகளிலேயே சில மாற்றங்களைச் செய்திருக்கின்றது ஸ்கோடா நிறுவனம். இந்த கார் மாடல் ஸ்டைல் (Style), ஸ்போர்ட்லைன் (Sportline) மற்றும் எல்-அண்ட்-கே (L&K) ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது.
ஆனால், இனி வரும் நாட்களில் உயர் நிலை தேர்வில் மட்டுமே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கும். உயர்நிலை அதிக விலைக் கொண்டதாக இருந்த நிலையில், தற்போது அதன் விலையையும் ஸ்கோடா குறைத்திருக்கின்றது. அந்தவகையில், ஸ்கோடா கோடியாக் கார் மாடலின் உயர் நிலை தேர்வான எல் அண்ட் கே-வின் விலையில் ரூ. 2 லட்சம் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது.

எனவே முன்னதாக ரூ. 41.99 லட்சத்திற்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஸ்கோடா கோடியாக் எல் அண்ட் கே இனி வரும் நாட்களில் ரூ. 39.99-க்கே விற்பனைக்குக் கிடைக்கும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. விலை குறைப்பு காரணமாக வேறு ஏதேனும் மாற்றத்தை இந்த காரில் செய்திருக்குமா ஸ்கோடா என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கக் கூடும்.
ஆனால், விலைக் குறைப்பைக் காரணம் காட்டி எந்த சின்ன மாற்றத்தையும் ஸ்கோடா எல் அண்ட் கே வேரியண்டில் செய்யவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், அந்த தேர்வு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடலாகவே இப்போதும் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.
ஸ்கோடா நிறுவனம் கோடியாக் கார் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் மோட்டாரை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் 190 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் வாயிலாகவே காரின் நான்கு வீல்களுக்கும் இயக்க திறன் கடத்தப்படுகின்றது. ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் சில மாற்றங்களையும் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், விரைவில் புதுமுக கார் மாடல் ஒன்றையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. சப்-4 மீட்டர் வகை எஸ்யூவி ரக காரையே அது அடுத்ததாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதற்கான பணிகளில் அது தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், எப்போது வேண்டுமானாலும் அந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய புகழ்பெற்ற கோடியாக் எஸ்யூவி கார் மாடலில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கின்றது.
இந்த கார் மாடல் இந்தியாவில் ஜீப் மெரிடியன், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹூண்டாய் டக்சன் மற்றும் எம்ஜி குளோஸ்டர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மிக சிறந்த போட்டியாளனாக மாறும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை குறைப்புடன் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட காராக ஸ்கோடா கோடியாக் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதால் இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பிரீமியம் கார் பிரியர்கள் மத்தியிலேயே அதற்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








