எத்தனை கோடீஸ்வரர்கள் இதன்பின் வாங்கினாலும் முதல் ஓனர் இவர்தான்! ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), செக் குடியரசு நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம். ஃபோக்ஸ்வேகன் குழுத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. 2001ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவிலும் தனது கார்களை விற்பனை செய்துவரும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தில் இருந்து விரைவில் கைலாக் (Kylaq) என்கிற சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதன் விலை ரூ.7.89 லட்சமாக நிர்ணயிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்கோடா கைலாக் காரை இந்தியாவில் பெற போகும் முதல் கஸ்டமர் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதில் தனது பெயரும் இடம்பெற வேண்டும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் நீண்ட வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகவே கைலாக் என்கிற புதிய எஸ்யூவி காரை இந்தியாவில் அடுத்த 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த காருக்கான பெயர் 'கைலாக்' என நிர்ணயிக்கப்பட்டதற்கு பின்னால் ஓர் சிறிய கதை உள்ளது. அதாவது, இந்தியாவில் தனது அடுத்த சப்-4 மீட்டர் காருக்கான பெயர் என்னவாக நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான போட்டியை சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் நடத்தியது. அதாவது, யார் வேண்டுமானாலும் தங்கள் மனதுக்கு தோன்றும் பெயரை தெரிவிக்கலாம். அதில், ஸ்கோடா நிறுவனத்தால் தேர்வு செய்யப்படுவோர் அந்த காரையே பரிசாக பெறுவர்.
இதுதான் அந்த போட்டி ஆகும். இந்த போட்டிக்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விதித்த ஒரே நிபந்தனை என்னவென்றால், காருக்கான பெயர் 'K'-இல் துவங்கி 'Q'-இல் முடிய வேண்டும் என்பதாகும். இதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் பல்வேறு தரப்பினர் தெரிவித்த பெயர்களில் க்விக், காஸ்மிக், கைலாக், கைரோக், காரிக், கார்மிக், க்ளிக் மற்றும் கயாக் என்கிற பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த 8 பெயர்களுள் ஒன்றை தேர்வு செய்ய பல்வேறு கட்ட ஆலோசனைகளில் இறங்கிய ஸ்கோடா ஆட்டோ நிறுவனம், இறுதியாக 'கைலாக்' பெயரை தேர்வு செய்துள்ளது. அதாவது, இந்த பெயரை தான் தனது புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்கு ஸ்கோடா சூட்ட உள்ளது. இந்த பெயரை பரிந்துரை செய்தவரின் பெயர் முகமது ஜியாத். இதனை அதிகாரப்பூர்வமாக முகமது ஜியாத்தின் புகைப்படத்துடன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
கேரளாவின் காசர்கோட் பகுதியில் வசிக்கும் முகமது ஜியாத், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் ஆங்கில பட்ட படிப்பை முடித்துள்ளார். தற்சமயம் மலப்புரம் பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் குரான் ஆசிரியராக பணியாற்றிவரும் முகமது ஜியாத், 1 வருடம் இஸ்லாமிய படிப்பையும் இதற்காக பயன்றுள்ளார். ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இவரது பெயரை அறிவித்த உடன் இவருக்கு பெரிய ஷாக் ஆகியுள்ளது.

ஏனெனில், முகமது ஜியாத்துக்கு கார்கள் மீது அந்த அளவிற்கு ஆர்வம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், கைலாக் என்கிற பெயரை சொல்லியதன் மூலம் தான் வெற்றி பெற்றதை இப்போதுவரையில் முகமது ஜியாத்தால் நம்ப முடியவில்லை. கார்கள் மீது பெரியதாக ஆர்வம் இல்லாவிடினும், தனது குடும்பத்திற்காக ஒரு கார் வாங்க வேண்டும் என எல்லா குடும்ப தலைவர்களை போல் இவரும் விரும்பியுள்ளார்.
அதன்படி, ஸ்கோடா கைலாக் காரையும் இலவசமாக பெற உள்ளார். இதுகுறித்து ஸ்கோடா வெளியிட்டுள்ள இணைய பதிவின்படி, அடுத்த 2025ஆம் ஆண்டில் ஸ்கோடா கைலாக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த காரை இந்தியாவில் பெற போகும் முதல் கஸ்டமர் முகமது ஜியாத் ஆவார். மேலும், சிறந்த பெயர்களை பரிந்துரைத்த முதல் 10 நபர்க்ளுக்கு செக் குடியரசு நாட்டின் தலைநகர் பராகுவேயில் உள்ள ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நேரில் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய காருக்கு மக்களை பெயர் பரிந்துரை செய்ய சொல்வது புதியது ஆகும். அதனினும், சிறந்த பெயரை தேர்வு செய்தவருக்கு அந்த காரையே பரிசாக வழங்க உள்ளது நாம் கேள்விப்படாத ஒன்றாகும். ஸ்கோடா கைலாக் காரின் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.10 இலட்சத்தை தாண்டிவிடும். எதர்ச்சையாக ஒரு பெயரை கூறியது மூலம், இவ்வளவு விலைமிக்க பரிசை முகமது ஜியாத் பெறவுள்ளார்.


Click it and Unblock the Notifications









